துருவ மஹாராஜருடைய வைபவம்
பிறகு, பலவித ஆயுதங்களுடன் அக்னிஜ்ஜவாலை வீசும் முகங்களையுடைய அரக்கர்கள் தோன்றி போர்க்கருவிகளையேந்தி கர்ஜனை செய்தார்கள். குபுகுபுவென்று அனலெழும்பும் முகமுடைய நரிகள் துருவனைச் சுற்றிக் கொண்டு அகோரமாக ஊளையிட்டன. சிங்கம், முதலை, ஒட்டகம் போன்ற முகங்களைக் கொண்ட நிசாசரர்கள் “இந்தப் பையனைக் குத்துங்கள்! கொல்லுங்கள்! தின்னுங்கள்!'' என்று பெருங்கூச்சலிட்டார்கள். துருவனோ கோவிந்தனின் சரணாரவிந்தங்களிலேயே தன் மனதைலயப்படுத்தியதால், அப்பூத கணங்களின் சப்தங்களும் அச்சுறுத்தல்களும் துருவனை ஒன்றும் செய்யமாட்டாமற்போயின.
அவன் அவற்றைக் கவனிக்காமல், ஸ்திரமான சித்தத்துடன் ஸ்ரீமந்நாராயணனே தன்னுள் எழுந்தருளியிருப்பதாகத் தியானித்துக் கொண்டு, மற்றொன்றும் அறியாமல் இருந்தான். இவ்விதமாகத் தேவர்கள் பிரயோகித்த மாயைகள் எல்லாம் நாசமடைந்தன. அதைக் கண்ட தேவதைகள் துருவ மகாத்மாவின் தபோ மகிமையினால் தங்களுக்கு என்ன அபாயம் நேரிடுமோ என்று பயந்து அந்தத் தவத்தை நிறுத்துவதற்கு உபாயந் தேட வேண்டும் என்று உறுதியாகத் துணிந்து, லோகாபிதாவான ஸ்ரீமந்நாராயணனைச் சரணடைந்து, “தேவ தேவனே! 'துருவனின் தவ மகிமையினால் நாங்கள் தஹிக்கப்படுகிறோம். அதனால் உம்மைச் சரணடைந்தோம். சந்திரன் தினந்தோறும் தனது கலைகளினால் அபிவிருத்தி அடைவதைப் போல, உத்தான பாதனின் மகன் துருவனும் தவச்சிறப்பால் வளர்ந்து வருகின்றான்.
ஆகையால் நாங்கள் பயப்படுகிறோம். அந்தப் பாலகன், இந்திர, வருண, குபேர, சூரிய, சந்திராதிகளுடைய பதவிகளிலே எதைக் கேட்பானோ தெரியவில்லை. ஆகையால் அவனுடைய தவத்தை நிறுத்தி, எங்களுடைய கவலையைத் தீர்க்க வேண்டும்!'' என்று முறையிட்டார்கள். அவர்களை மகாவிஷ்ணு கடாட்சித்து, “சிறுவன் துருவன் பெரும்தவம் புரிகிறான் என்றாலும் இந்திரன், சூரியன், சந்திரன் ஆகியோரது அதிகாரங்களில் எதையும் அவன் கேட்கவில்லை. அவனது மனோரதத்தை நான் அறிவேன். ஆகையால், நீங்கள் கவலைப்படாமல் செல்லுங்கள். நான் துருவனுக்கு இஷ்டமான வரத்தையளித்து, அவனது தவத்தைப் பூர்த்திசெய்கிறேன்'' என்று அருளிச்செய்தார்.
பிறகு, தேவர்கள் திருப்தியாக பயம் இல்லாமல் திருமாலிடம் விடை பெற்றுச் சென்றார்கள். அதன்பின்னர், சர்வாத்மகனான எம்பெருமான் துருவனுடைய அதீத தவத்திற்கு மெச்சி, திருவுள்ளம் உவந்து, நான்கு திருத்தோளுடைய திருமேனியோடு துருவன் முன்பு காட்சி கொடுத்து, "உத்தானபாதனின் மகனே! உனக்குச் சுபமுண்டாகக் கடவது. உன் தவத்தைக் கண்டு மகிழ்ந்து, உனக்கு விருப்பமான வரத்தைத் தருவதற்கே நான் வந்தேன். நீ உனது தவத்தை என்மீது நிலையாக
நிறுத்தியதால் நான் மகிழ்ந்தேன். உனக்கு விருப்பமான வரத்தைக் கேட்பாயாக!'' என்றார்.
துருவன் கண்களைத் திறந்து, தான் தியானித்த விதத்திலேயே, சங்கு, சக்கரம், கதை, கட்கம், சார்ங்கம் முதலிய பஞ்சாயுதங்களோடும் கிரீட, வனமாலிகா, கௌஸ்துப பீதாம்பர அலங்காரத்தோடும் எழுந்தருளிய ஸ்ரீ:யப்பதியைக் கண்டு, பூமியில் விழுந்து தெண்டனிட்டு, மெய்சிலிர்க்க, பயபக்தியுடன் தேவ தேவனான ஸ்ரீமந் நாராயணனைத் துதி செய்யலானான். “இந்த மகா புருஷனைக் குறிப்பிட என்ன வாக்கியத்தைச் சொல்வேன்? யார் சொன்னது போலத்துதிப்பேன்?'' என்று துருவன் மனங்கலங்கி, ஒன்றுமே தோன்றாமல், விஷ்ணு பகவானைச் சரணடைந்து, "ஸ்வாமி! ஷட்குண ஐஸ்வர்யஸம்பன்னனே! அடியேனது தவத்துக்குத் திருவுள்ளம் உகந்தீரானால், உம்மையே ஸ்தோத்திரம் செய்ய நினைக்கும் எனக்கு, அதற்கேற்ற அதீத ஞானத்தை வழங்கியருள வேண்டும்.
வேதாந்த வேதிகளான ப்ராம்மணாதிகளே உமது மகிமையைச் சொல்ல வல்லவர்களல்லர். அப்படிப்பட்ட உம்மைப் பாலகனான நான் எப்படித் துதிப்பேன்? அடியேன் மனது உமது சரண கமலங்களிலே பதிந்து, பக்தியுடன் உம்மைத் துதிக்கவே விரும்புகிறது. ஆகையால் அடியேனுக்கு அதற்கேற்ற ஞானத்தைத் தந்தருள வேண்டும்!'' என்று பிரார்த்திக்க, ஸ்ரீகோவிந்தன், சகல வித்யா மயமான தமது பாஞ்சசன்யத்தினாலே, அப்பாலகனின் முகத்தில் (கன்னத்தின் கதுப்பில்) ஸ்பரிசித்து அருளினான்.
துருவனுக்கு ஞானோதயமானதால் அவன் ப்ரசன்ன முகத்துடன் தெண்டனிட்டு, 'ப்ரித்வி, அப்பு, தேஜஸ், வாயு, ஆகாஸங்களும், தன்மாத்திரைகளும் மனசும், மற்றுமுள்ள இந்திரியங்களும் மகத்-அஹங்காரங்களும் மூலப் பிரகிருதியும் எவனுடைய ரூபங்களோ, அந்தச் சர்வேஸ்வரனான விஷ்ணு பகவானுக்குத் தெண்டனிடுகிறேன்! இயல்பிலேயே சாத்விகனாய் தூய்மையானவனாய், சூட்சும ரூபியாய், ஞானத்தால் எங்கும் வியாபித்திருப்பவனாய், ப்ரகிருதிக்கும் பரனாக இருக்கும் புருஷனான குணாகரனான புருஷோத்தமனுக்குத் தெண்டனிடுகிறேன்!
இப்ருத்வி முதலான பூதங்களும் (ப்ரித்வி, அப்பு, தேஜஸ், வாயு, ஆகாசம்), கந்தாதி குணங்களும் (சப்த, ஸ்பரிச, ரூப, ரஸ, கந்த), புத்தி முதலியவைகளும், சம்சாரியான ஜீவன் ஆகியவர்களைக் காட்டிலும் பரனான மூத்த புருஷன் எவனுடைய ரூபமாக இருப்பானோ அத்தகைய ஜகத்பதிக்குத் தெண்டன் சமர்ப்பிக்கிறேன்! ப்ரமலக்ஷ்ணமுள்ளதாய், சகல உலகிற்கும் அதிபதியாய் தூய்மையானதாயுள்ள உமது ஸ்வரூபத்துக்கு நமஸ்காரம். சர்வாத்மகனே! சமஸ்த ஸக்திகளும் அமைந்துள்ள ப்ரகத்வத்தினாலும் ஜகதாகாரத்தினாலும் மகாப்பிரமாணமாக இருப்பதாலும், ப்ரஹ்மம் என்ற நாமதேயமுடையதாய், விகாரமில்லாதாய், யோகி சிந்தியமாய் விளங்கும் உமது திவ்ய ஸ்வரூபத்துக்கு வணக்கம்.
நீரே ஸகஸ்ர ஸிரஸ்களும், ஸஹஸ்ர பாதங்களும் ஸஹஸ்ர கண்களும் உடையவராய், புருஷராய், ஸர்வத்தையும் வியாபித்து, பூமியாகிற அண்ட சராசரமயமான பிரபஞ்சத்தைவிடப் பதின்மடங்கு அதிகமாக உயர்ந்துள்ளீர்! புருஷோத்தமனே! விராட் என்று வழங்கப்பட்ட அவ்யக்த சரீரகனான அநிருத்தனும், ஸ்வராட் என்று சொல்லப்பட்ட கேவல ஆத்ம ப்ராப்தியுள்ளவனும், ஸம்ராட் என்று சொல்லப்பட்ட பரம பதத்தையடைந்தவனும், ஆதிபுருஷன் என்று சொல்லப்பட்ட ப்ரஹ்மதேவனும், உம்மிடமிருந்தே உண்டானார்கள். சமஷ்டி தேகனான ஹிரண்யகர்ப்பன் என்ற அந்தப் புருஷன் பிரிதிவிக்கு அதோ பாகத்திலும், பாரிச தேகத்திலும், ஊர்த்துவ தேகத்திலும் வியாபித்துள்ளான். உம்மிடத்திலேயே பிரபஞ்சங்களெல்லாம் உண்டாயின.
இவ்விதம் உம்மால் படைக்கப்பட்டு உம்முடைய ரூபமாயிருக்கிற ஹிரண்யகர்ப்பத்திலே அகில பிரபஞ்சங்களும் அடங்கியிருப்பதால் எல்லாமே உமக்குள்ளே என்று தனியாக வேறு சொல்லவேண்டுமோ? யாவும் ஹோமம் செய்யப்பெற்ற யாகமும், பிரஷதாட்சியம் என்ற அவிசும், கிராமியங்கள், ஆரணியங்கள் என்ற இருவிதமான பசுக்களும், ரிக், யஜுர், சாம வேதங்களும் சந்தங்களும், அசுவங்களும் அஜாதிகங்களும் ஒற்றைப் பல்வரிசையுள்ள ஜந்து சாக்தங்களும், மிருகங்களும் உம்மிடத்திலேயே உண்டாயின. இன்னும் உம்மிடத்திலேயே உண்டாகவும் போகின்றன.
உமது திருமுகத்திலே பிராமணர்களும் உமது புயங்களில் க்ஷத்திரியர்களும், தொடைகளிலே வைசியர்களும், பாதங்களிலே சூத்திரர்களும், கண்களிலே சூரியனும், மனதிலே சந்திரனும், ப்ராணத்திலே வாயுவும், முகத்திலே அக்னியும், நாபியில் அந்தரிட்சமும், சரீரத்திலே ஸ்வர்க்கமும், கர்ணங்களிலே திசைகளும், பாதங்களிலே பூமியும் உண்டாயின. அது விஸ்தீரணமுள்ள ஆலமரம், அதிக நுண்ணிய பீஜத்திலே அடங்கியிருந்தாற்போல, மகத்தான இந்தப் பிரபஞ்சம் எல்லாம், பிரளய காலத்திலே ஆதிகாரணபூதனான உம்மிடத்திலேயே அடங்கியிருந்தன. வட விருட்சம் மறுபடியும் விதையிலிருந்து தோன்றிச் சாகோபசாகமாக விஸ்தாரமாவது போல படைப்புக் காலத்திலேயே பிரபஞ்சம் எல்லாம் உம்மிடத்திலிருந்தே உண்டாகிப்பரவின.
ஜகந்நாயகனே! பட்டைகள் ஒன்றின்மேல் ஒன்றாய் மூடப்பெற்று, ஏகாதாரமாகத் தோன்றும் இளவாழைக் கன்றே பெரிதானதும் வேறாகாமல் இருப்பதுபோல, சூக்ஷ்ம சிதசித்தர்களோடு கூடிக் காரண ரூபமான உம்மைக் காட்டிலும் ஸ்தூல, சித்தசித்துக்களின் ரூபமாய்க் காரியமான இந்தப் பிரபஞ்சம் வேறாகாமல் இருக்கிறது. சுத்த ஆனந்தம் இடைவிடாமல் நிகழ்வதும் எப்பொழுதும் ஒரே விதமாயிருக்கிற ஞானமும் உம்மிடத்தில் உண்டு. இப்படியல்லாமல் மகிழ்ச்சியும் துக்கமும் உண்டாக்குவதும் சுத்த துக்கத்தை உண்டாக்குவதுமான ஞானங்கள் உம்மிடம் இல்லை.
ஏனெனில், பிராகிருதங்களான சத்துவாதி குணங்களோடு நீங்கள் கலப்பில்லாமல் அப்ராகிருத சுத்த சத்வமயனாக இருக்கிறவரல்லவா? பிரபஞ்சத்துக்கு வேறாய் நிற்கின்ற ஒரே ஆத்மாவாய், சர்வ பூத சரீரகனாய் விளங்கும் உமக்கு வந்தனம் செய்கிறேன். சூட்சும ப்ரகிருதியும் ஸ்தூலப் ப்ரகிருதியும் புருஷனும், விராட் ஸ்வராட், சம்ராட் என்பவர்களும் எல்லாம் நீரே அல்லவா? எல்லோருடைய அந்தக் கரணங்களிலேயும் அக்ஷயமான ஞானமயனாகப் பிரகாசிப்பவரும் நீரே அன்றோ? நீரே அதனதன் சாரமாக எல்லாவற்றிலும் இருக்கிறீர்? உம்மிடத்திலேயே சர்வமும் இருக்கின்றன. ஆகையால் சர்வாத்மகனான உமக்குத்தெண்டனிடுகிறேன்!
எல்லாவற்றுக்கும் காரணமாய், எல்லாவற்றிலும் வியாபித்து, எல்லாவற்றினுள்ளேயும் இருக்கின்றவர் நீரே! ஆகையால் நீரே என் மனோரதத்தை அறிந்திருப்பீர். ஆகையால் அடியேன் விண்ணப்பம் செய்ய வேண்டுவது? ஸ்வாமி, உம்மைப் ப்ரத்யட்சமாகக் கண்டு தெண்டன் சமர்ப்பித்தேனாகையினால் அடியேனது மனோரதங்கள் நிறைவேறின. அடியேனது தவமும் பலித்தது. அடியேன், க்ருதார்த்தனானேன்!'' என்று துதி செய்து நின்றான். அவனை நோக்கி பகவான் விஷ்ணு புன்முறுவலுடன், "ராஜகுமாரனே! என்னைக் கண்டு வணங்கியதால் உன் தவம் பலித்தாலும் நான் உனக்கு சேவை சாதித்தது வீணாகக் கூடாது. ஆகையால் உனக்கு வேண்டிய வரத்தைக் கேட்பாயாக, நான் பிரத்யட்சமானேனானால் எவருக்குமே சகல மனோரதங்களும் கைகூடும்!'' என்றார்.
"தேவதேவனே! சர்வ பூத அந்தர்யாமியான உமக்கு அடியேனது விருப்பம் தெரிந்தேயிருக்கும். இருப்பினும் நீரே நியமித்ததால் விண்ணப்பிக்கிறேன். இந்திரன் உமது அனுக்கிரகத்தினால் அல்லவோ,
திரிலோக ராஜ்யத்தை அனுபவிக்கிறான்? ஜனார்த்தனனே! சுருசியானவள் தனது கர்ப்பத்தில் நான் பிறவாததால் ராஜனுக்குத் தகுதியான சிங்காஸனத்துக்கு நான் அருகதையானவனல்ல என்று என்னைப் பார்த்து இறுமாப்புடன் ஏளனம் செய்தாள். ஆகையால் ஜகத்துக்கு ஆதாரமும் சர்வ உத்தமமும் அவ்யயமுமான உன்னத ஸ்தானத்தை அடையவே நான் விரும்புகிறேன். இதற்குத் தேவரீர் திருவருள் புரிய வேண்டும்!" என்றான் துருவன்.
ஸ்ரீபகவான், துருவனைக் கடாட்சித்து. “பாலனே! நீ விரும்பிய பதவியை அடையக் கடவாய். இதற்குக் காரணம் வேறொன்றுண்டு. சொல்கிறேன் கேள். பூர்வ ஜன்மத்திலே நீ ஒரு பிராமணனாகப் பிறந்து, தாய் தந்தையருக்குப் பணிவிடைகள் செய்தும், ஏகாக்கிர சித்தத்துடன், என்னையும் ஆராதித்து வந்தாய். சில காலம் சென்ற பிறகு, உனக்கு யௌவன வயது வந்தபோது, சர்வாபரண பூஷிதனும் சகல போக சம்பன்னனும் மகா சுந்தர தேகமுடையவனுமான ஒரு ராஜகுமாரன் உனக்கு நண்பனானான். அப்போது நீ அவனுடைய ஐஸ்வரிய போகங்களைக் கண்டு ஆசைப்பட்டு, ராஜ புத்திரனாகப் பிறக்கவேண்டும் என்று
இச்சித்தாய்.
ஆகையால் உன் மனோரதத்துக்கு ஏற்றதாக உனக்குத் துர்லபமான உத்தானபாதனது மாளிகையில் பிறந்தாய். என்னைத் துதியாத மற்றவர்களுக்கு ஜகத் பூசிதமான சுவாயம்புவமநுவின் வம்சத்தில் பிறவியுண்டாவது கிட்டாததாகும். இப்பொழுதும் நீ அத்யந்த பக்தியால் என்னை மகிழ்வித்தாய். என்னிடத்தில் தவத்தை நிறுத்தி என்னைத் தியானித்தவன் அதிசீக்கிரத்தில் சர்வோத்தமமான மோட்சத்தை அடைவானானால், அற்பமான சொர்க்காதி பயன்களை அடைவதில் விந்தையில்லை. நீயும் எனது அனுக்கிரகத்தினால் மூன்று உலகங்களுக்கும் மேன்மையான தாய், தாரா கிரக நட்சத்திரங்களுக்கும் ஆதார பூதமாய், சூரிய, சந்திர, அங்காரக, புத, பிரகஸ்பதி ஸ்தானங்களுக்கும் நட்சத்திர மண்டலத்துக்கும் சப்த ரிஷிகளின் மண்டலத்திற்கும் விமானாரூடராய்ச் சித்தர்கள் சஞ்சரிக்கிற ஸ்தானங்களுக்கும் அதியுன்னதமாய்த் திகழும் ஸ்தானத்தை அடைந்து, சுகமாய் இருப்பாயாக.
தேவதைகளில் சிலர் நான்கு யுகங்கள் வரையிலும், சிலர் மநுவந்தரப் பரியந்தமுமல்லாமல் அதிக காலமும் இருக்கமாட்டார்கள். நீயோ எனது கிருபையால், கல்ப காலம்வரை அந்தச் சர்வ உன்னத ஸ்தானத்தில் சுகமாக இருக்கக் கடவாய். உன்னுடன் உன்னுடைய தாயான சுநீதியும் திவ்ய விமானத்தில் ஏறிக்கொண்டு, நட்சத்திர ரூபமாய் பிரகாசித்துக்கொண்டு, கல்பாந்தபரியந்தமும் உன் அருகிலேயே இருக்கக் கடவள். வானத்திலே துருவ நட்சத்திரமாய்த் திகழும் உன்னை எவனாகிலும் அதிகாலையிலும்
மாலையிலும் மனவுறுதியுடன் கீர்த்தனம் செய்வானாகில், அவன் மகாபுண்யத்தைப் பெறுவான்!'' என்று திருவாய் மலர்ந்தருளினார்.
இவ்விதமாக திருமாலிடம் வரம் பெற்ற துருவன், சர்வலோகோன்னத ஸ்தானத்தை அடைந்தான். தாய் தந்தையருக்குப் பணிவிடை செய்ததனாலும் தவச் சிறப்பாலும், ஸ்ரீமத் த்வாதசாக்ஷர மகாமந்திர மகிமையினாலும் மகான்மாவான துருவனுக்கு உண்டான அபிமானத்தையும் ஐஸ்வரியத்தையும் பார்த்த அசுர குருவான சுக்கிராச்சாரியார் மகிழ்ந்து, “சப்த ரிஷிகளும் எந்த மகாத்மாவை குறித்துக் கொண்டு சஞ்சரிக்கின்றனரோ, அந்தத் துருவனது மேன்மையான தவத்தின் சிறப்பை என்னவென்று சொல்வேன்? இது வெகு விந்தையானது. இந்தப் பிரபாவத்தைக் கொண்டாட யாராலே இயலும்?
இதமும் சத்தியமுமான வாக்குள்ள துருவனின் தாயான சுநீதியின் மகிமையை வர்ணிக்கத்தக்க கவிகளும் உலகில் உண்டோ? அந்தப் பெண்ணரசி துருவனைக் கர்ப்பத்தில் தரித்ததால், சர்வ உத்தமமும் நிலையான தன்மையும் உடைய அந்தத் திவ்விய ஸ்தானத்தையடைந்தாள். என்ன அதிர்ஷ்டம்! என்ன விந்தை!'' என்று சில கவிகளால் துதித்தார். "மைத்ரேயரே! துருவன் சர்வோன்னதமான பதவியைப் பெற்றதைக் கண்டு எந்த மனிதன் கீர்த்தனம் செய்வானோ, அவனது சகல
பாவங்களும் நிவர்த்தியாகும். சொர்க்க லோகத்தில் வாசஞ்செய்வான். அன்றியும் அவன் வானத்திலும் பூமியிலும் ஸ்தானப் பிரஷ்டமாகாமல் சகல சௌபாக்கியமும் கொண்டவனாய்த் தீர்க்காயுளுடன் வாழ்வான்!" என்று பராசர மகரிஷி துருவ மஹாராஜனுடைய வைபவத்தை கூறி நிறைவு செய்தார்.
Comments
Post a Comment