கண்ணிநுண் சிறுத்தாம்பு - பாசுரம் 3 :
திரிதந்தாகிலும் * தேவ பிரானுடை*
கரிய கோலத்* திரு உருக் காண்பான் நான்*
பெரிய வண்குருகூர்* நகர் நம்பிக்கு ஆள்
உரியனாய்* அடியேன் பெற்ற நன்மையே*
திரிதந்தாகிலும் - தேவுமற்றறியேன் என்று இருந்தாலும் (ஆழ்வாரைத்தவிர வேறு எந்த தெய்வத்தை பற்றியும் அறிய வேண்டாம் என்று இருந்தாலும்)
தேவ பிரானுடை - எம்பெருமானே என்மேல் கடாக்ஷித்தருளி அவனுடைய
கரிய கோலத்திரு உரு - உகப்பான கரிய கார்முகில் போன்ற சேவையை தன் தேவிமார்களுக்கும் ஆழ்வாருக்கு சாதித்தபடியே
காண்பான் நான் - அடியேனுக்கும் சாதிக்கப்பெற்றேன்
பெரிய வண்குருகூர் நகர் நம்பிக்கு - பெருமையும் புகழும் மிக்க திருக்குருகூரில் அவதரித்த சிறந்த கல்யாண குணங்களையுடைய ஆழ்வாருக்கே
ஆள் உரியனாய் அடியேன் - உரிய அடியனாய் இருக்கப்பெற்றது
பெற்ற நன்மையே - அடியேன் பெற்ற பெரும் பேறு
கண்ணிநுண் சிறுத்தாம்பு - பாசுரம் 4 :
நன்மையால் மிக்க* நான்மறையாளர்கள்*
புன்மையாகக்* கருதுவர் ஆதலின்*
அன்னையாய் அத்தனாய்* என்னை ஆண்டிடும்
தன்மையான்* சடகோபன் என் நம்பியே*
நன்மையால் மிக்க - ஆத்ம குணங்களோடு அறநெறியில் நிற்பவர்கள்
நான்மறையாளர்கள் - அவ்வறநெறியில் நிற்க ஊக்குவிக்கின்ற வேதங்களை ஆதாரமாக கொண்டவர்கள்
புன்மையாகக் - தாழ்மையாகக்
கருதுவர் - எண்ணுவர்
ஆதலின் - இப்படி இவர்கள் எண்ணும் காரணத்தினாலேயே
அன்னையாய் அத்தனாய் - (ஆழ்வார்) அடியேனுக்கு தந்தையும் தாயும் ஆகி
என்னை ஆண்டிடும் - "எவரும் இவனை காப்பாற்றுவோரில்லை" என்று அடியேனை ஆட்கொண்டு
தன்மையான் - போக்கிடம் அற்றவர்களுக்கு புகலிடம் தருவதையே தன்னுடைய ஸ்வபாவமாக கொண்ட
சடகோபன் - சடம் எனும் வாயுவை தன் கால்களால் எட்டித்தள்ளி கோபித்த ஸ்வாமி நம்மாழ்வாரே
என் நம்பியே - அடியேனுக்கு நாதனும் ஸ்வாமியும் ஆவார்.
கண்ணிநுண் சிறுத்தாம்பு - பாசுரம் 5 :
நம்பினேன்* பிறர் நன்பொருள் தன்னையும்*
நம்பினேன்* மடவாரையும் முன்னெலாம்*
செம்பொன் மாடத்* திருக்குருகூர் நம்பிக்கு
அன்பனாய்* அடியேன் சதிர்த்தேன் இன்றே
நம்பினேன் - நான் எனதென்று திடமாக கொண்டேன்
பிறர் - சித்து அசித்துக்களுக்கு நாதனாக உள்ள நாராயணனே
நன்பொருள் தன்னையும் - கௌஸ்துபம் போன்று விரும்பி ஏற்றுக்கொள்ளத்தக்க ஆத்மாவை
நம்பினேன் - நிலையானதென்று கொண்டேன்
மடவாரையும் - நிலையில்லாத பெண்ணின்பம் முதலானவற்றை
முன்னெலாம் - இதுவரை அடியேன் கழித்த காலத்தில் எல்லாம்
செம்பொன் மாடத் - செம்பொன் மாடங்களை வைத்தாற்போல் வரிசையான மாடங்களை உடைய
திருக்குருகூர் நம்பிக்கு - திருக்குருகூரில் அவதரித்த நிறைந்த குணங்களை உடைய ஆழ்வார்க்கு
அன்பனாய் அடியேன் - அன்புக்குரியோனாயும் அடியோனாயும்
சதிர்த்தேன் இன்றே - பேறு பெற்றேன் இன்று.
Comments
Post a Comment