இன்று நாம் விவாதிக்கும் ஒரு தலைப்பு, வாழ்க்கையில் முன்னேற நல்ல குண நலன்களோடு வாழ பிறருக்கு தொந்தரவு மனதாலும் செய்கையினாலும் செய்யாமல் இருப்பது எப்படி என்பது தான். ஆனால் தலைப்பு "நான் திருந்தவே மாட்டேன்" என்று இருக்கிறதே என்றால், இந்த ஒரே வரி தான் மேலே சொன்ன எல்லாவற்றிக்கும் காரணம். எப்படி என்றால், நாம் ஒரு செயலை செய்யும் போது அது அடுத்தவருக்கு எந்த விதத்திலும் துன்பமோ இடைஞ்சலோ தராமல் இருக்க வேண்டும். ஆனால் இன்றைய சூழ்நிலையில் அப்படி எல்லாமே நடப்பதில்லை. அது தான் வருத்தத்திற்கு உரிய விஷயமாக இருக்கிறது. இனி உதாரணங்களைப்பார்ப்போம்.
நாம் ஒரு பேருந்தில் பயணம் செய்கிறோம். அப்போது அப்பேருந்தில் உட்கார இடம் இருக்கலாம். இடம் இருந்தால் உட்கார்ந்து கொள்ளலாம். இல்லையெனில் நின்றுகொண்டு பயணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அப்போது, அமர்ந்திருப்பவர்களுக்கு இடையூறு இல்லாமல் நிற்க வேண்டியது அவசியம். நாம் முதலில் எங்கு பிடித்து நிற்க வேண்டும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். உயரமாக இருக்கிறோம், கைகளில் ஏதும் பிரச்சினை இல்லை என்றால், பேருந்தின் மேல்புறம் பிடித்து நிற்கலாம். அல்லது பக்கவாட்டில் உள்ள கம்பிகளைப்பிடித்துக்கொண்டு ஒருபுறமாக நிற்கலாம்.
நீண்ட நேர பயணம், வேறு வழி இல்லை, அவசரம் என்றால், நின்றுகொண்டே போக வேண்டி இருந்தாலும் பேருந்தில் ஏறி விடுவோம், அப்போது அமர்ந்திருப்பவர்களின் பக்கவாட்டில் நின்றுகொண்டிருக்கும் பொது, அவர்கள் முன்பு கைபிடித்துக்கொள்ளக்கூடிய பகுதியில் கைகளை கொண்டு பிடித்துக்கொள்ளக்கூடாது. அது இருவருக்கும் அசௌகரியம், அநாகரீகமும் கூட. அவர்கள், "ஏன், இப்படி?" என்று கேட்குமளவிற்கு ஆகிவிடும்.
மேலும், ஒருவரை, சம்பந்தம் இல்லாமல் திரும்ப திரும்ப பார்ப்பதோ, அல்லது முகத்தை திருப்பிக்கொள்வதோ கட்டாயம் கூடாது. இது தான் மனத்தால் துன்பப்படுத்துவது. அவர்கள் நம்மை பார்த்தால் கூட யதார்த்தமாக இருப்பது தான் சிறந்தது. இன்றைய கால சூழ்நிலையில், மிக மிக கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பது அவசியம். நமது வசதியானது அடுத்தவர்களுக்கு துன்பம் விளைவிக்கக்கூடாது. மேலும், நம்மால் முடியும் என்றால், வயோதிகர்களுக்கு இடம் கொடுங்கள், கர்பிணிப்பெண்களுக்கு இடம் கொடுங்கள். நீங்கள் உங்கள் மனசாட்சியோடு பார்க்கும் போது ஒருவர் நிற்க சிரமப்படுகிறார் என்றால் தயவுசெய்து இடம்கொடுங்கள்.
இன்றைய இளைஞர்கள் பலரிடம் காண்பது, இடம் கொடுக்காமல் இருக்க சிறந்த வழி பாட்டு கேட்பதற்காக காதில் தலையணி (headset) அணிந்துகொண்டு கண்களை மூடிக்கொள்வது. அல்லது தலையை கீழே குனிந்துகொண்டு காணொளி (videos) காண்பது. அல்லது, அருகில் என்ன நடந்தாலும் தனக்கு எதுவுமே தெரியாதது போல், அங்கும் இங்கும் திரும்பி வேடிக்கை பார்ப்பது. இதனால் என்ன அவர்களுக்கு கிடைக்கப்போகிறது என்றால், நாம் உட்கார்ந்துகொண்டிருக்கிறோம் என்கிற ஒரு அற்ப சந்தோஷம் தான். அதில் இன்னொரு விஷயமும் உண்டு. இயலாதவர்களுக்கு உதவிட இடம் கொடுத்தால், நமக்கும் ஒரு திருப்தி கிடைக்கும், அவர்களுக்கும் ஒரு வலி குறைந்த இன்பம் ஏற்படும். ஆனால், நம்மால் முடியும் போது யாருக்கும் இடம் கொடுக்காமல் இருக்கும் போது, அதாவது தெரிந்தே அழுத்தமாக இருக்கும் போது, நாம் நம் மனசாட்சி முன்பே குற்றவாளி ஆகிவிடுகிறோம். ஒருவேளை ஒரு வயோதிகர் முடியாமல் பேருந்திலேயே மயக்கம் போட்டு விழுந்துவிட்டால், நிச்சயம் உங்கள் மனசாட்சியே உங்களைக்கொன்றுவிடும்.
ஏன் என்றால், ஒருவர் இயலாமல் வருகின்றார். நமக்கு அருகில் நிற்கின்றார். நாமும் அவர் பார்க்காத போது அதை கவனித்துவிடுகின்றோம். ஆனால் எழுந்திருக்க விருப்பம் இல்லை. அவரைப்பார்க்காததுபோல் பாவனை செய்ய வேண்டும், அங்கும் இங்கும் பார்க்க வேண்டும், காணொளி காணுதல், பாட்டு கேட்பது போல தலையசைத்தல், கண்கள் மூடி உறங்குதல், கடைசியில் தலையை குனித்துக்கொள்ளுதல். உண்மையிலேயே இது உங்களுக்கு தலைகுனிவு தான், ஏன் என்றால், இத்துணை துன்பத்தை நீங்கள் உங்களுக்கு கொடுத்துக்கொண்டாலும் அவர்களுக்கு ஒரு உதவி கூட இல்லை என்பது துன்பம் தான். உங்களுக்கு தலைகுனிவு தான். இத்தனை அவஸ்தை உங்கள் மனதிற்கு தேவையா? எழுந்து இடம் கொடுத்து சந்தோஷப்படுத்தி சந்தோஷமாக நிற்கலாமே?
இது, இதைப் படித்தபின்பும் நான் திருந்தவே மாட்டேன் என்கிற "அன்பர்களுக்காக" அல்ல!
ஏன் என்றால் உங்களால் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் துன்பம் மட்டுமே!
Comments
Post a Comment