இராமாயணம்
சுந்தரகாண்டம்
அனுமான் மஹேந்திரகிரி உச்சியில் இருந்து லங்கைக்கு புறப்படுதல்:
அதிவீர தீரனான அனுமான் மஹேந்திரகிரியின் உச்சியில் நின்றுகொண்டு தனது பிதாவான வாயுபகவானை தியானித்து வணங்கி தென் திசை நோக்கி செல்வதற்காக அனைத்து வானர வீரர்களும் பார்த்துக்கொண்டிருக்கும்போதே தன்னுடைய தேகத்தை அதி பிரம்மாண்டமாக பெருக்கினான். இப்படி சமுத்திரத்தினை கடக்கவேண்டிய பெரிய தேகத்தையெடுத்த அனுமான் தன் கைகளால் அம்மலையை குலுக்கினான். அதனால் அங்கு பூத்திருந்த மரங்களெல்லாம் பூக்களை உதிர்ந்துவிட்டன. அனுமானால் மிதிக்கப்பட்ட அந்த பர்வதமானது மதயானை மதஜலத்தைப் வெளிவிடுவதுபோல் எங்கும் தண்ணீரைப் பெருகவிட்டது.
அம்மலையில் அனுமானின் மிதி பட்டதனால் நெருக்கப்பட்ட குகைகளிலிருந்த பிராணிகள் விகாரமாய் கூச்சலிட்டன. அதிலுள்ள பாம்புகளெல்லாம் படம் எடுத்து ஆடிக்கொண்டு கோரமான விஷ அக்னியைக் கக்கி பற்களால் கற்களை கடித்துக்கொண்டன. அதில் வசித்துவந்த கல்வியாளர்கள் தம் மனைவியருடன் மிகவும் பயந்து கவலையுடன் ஆகாயத்தில் வளர்ந்து நிற்கும் அனுமானை கண்டு ஆச்சரியமடைந்தனர். அனுமான் ஆகாயமார்கமாக போகிறபடியால் வாலை நீட்டி தோள்களை இறுக்கி, இடுப்பில் அடங்கி கால்களைக் குறுக்கிக்கொண்டான்.
தான் போகவேண்டிய வழியை நிதானித்து ஆகாயத்தை பார்த்துக்கொண்டே இதயத்தில் பிராணவாயுவை தடுத்து, கால்களை பூமியில் உறுதியாய் ஊன்றிக்கொண்டு, காதுகளை உட்சுருக்கி தனது பலத்தை பிரயோகித்து மேலே புறப்படும் சமயத்தில், வானர வீரர்களைப்பார்த்து கூறுகின்றான், "ராமபிரானால் விடப்பெற்ற பாணமானது எப்படி வாயு வேகமாகப்போகுமோ, அதைப்போலவே அடியேன் லங்கைக்கு செல்வேனாக, லங்கையில் சீதையைக்காணாவிடில் இந்த வேகத்துடனே ஸ்வர்கத்திற்கு செல்வேன், அங்கேயும் சீதையைக் காணாவிடில் ராவணனைக் கட்டிக்கொண்டு வந்துவிடுவேன்" என்று சூளுரைத்து கருடனைப்போல் மிக வேகமாக ஆகாயத்தில் பறந்தான்.
அப்போது நீண்டுகொண்டிருந்த அனுமானது திண் தோள்கள் மலையின் நுனியிலிருந்து வெளிப்பட்ட இரண்டு சர்ப்பங்களைப்போல் காணப்பட்டன. அனுமான் மிகுந்து வேகத்துடன் புறப்பட்டபடியால் அம்மலையில் உள்ள மரங்கள் எல்லாம் கிளைகளை சுருக்கிக்கொண்டு நான்கு திசைகளிலும் ஓடிவிட்டன. பறக்கும் போது அனுமானது துடையின் வேகத்தால் பல மரங்கள் பிடுங்கப்பெற்று ஒரு முகூர்த்தகாலம் அனுமனை பின் தொடர்ந்து சென்றன. ஆகாயமார்கத்தில் செல்லும் அனுமானுடைய கண்கள் சிவந்து மலையில் எரியும் நெருப்புகள் போலேயும், சூரிய சந்திரர்கள் ஒருசேர வந்தாற்போலேயும் தோன்றின. ஆகாயத்தில் நிறுத்தப்பட்ட அனுமானது வாலானது, இந்திரனுடைய கொடி போல் விளங்கியது.
மேலே தன் திருவுடம்பும் கீழே கடலில் விழும் நிழலுமாக அனுமான் காற்றினால் தள்ளப்படும் கப்பலை போல இருந்தான். அனுமான் பறக்கும் போது அவனது துடையின் வேகத்தால் கடலானது வெறி பிடித்தாற்போல் பொங்கியது. கடலில் மலைபோல் எழும்பும் அழைத்துகள்களை தன்னுடைய திருமார்பில் முதியபடியே அனுமான் பறந்து சென்றான். அங்கே கடலுக்குள் வசிக்கின்ற பாம்புகள் அனுமானைக் கருடனோ என்றெண்ணி திடுக்குற்றன. பத்து யோஜனை அகலமும் முப்பது யோஜனை நீளமும் கொண்ட அனுமானது நிழல் கடல் நீரினில் மிக அழகாய் தென்பட்டது.
இப்படி ஆகாயத்தில் சிறகுதான் பறக்கும் மலையென பிரகாசமாய் பரந்த அனுமானை அந்த சூரியனும் தகிக்கவில்லை, வாயுவும் அனுகூலமாய் வீசிற்று, ஆகாயத்தில் உலாவித்தெரிகின்ற தேவர்களும், கந்தருவர்களும், ரிஷிகளும், அனுமானது பலாதிசயத்தை புகழ்ந்து பாடினார்கள்.
Comments
Post a Comment