ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
உபதேச இரத்னமாலை
பதவுரை
முன்னம் திருவாய்மொழிப்பிள்ளை தாம் உபதேசித்த நேர்
தன்னின் படியைத் தணவாத சொல் மணவாள முனி
தன் அன்புடன் செய் உபதேச ரத்தின மாலை தன்னைத்
தன் நெஞ்சு தன்னில் தரிப்பவர் தாள்கள் சரண் நமக்கே - கோயில் கந்தாடை அண்ணன்.
முன்னம் - முற்காலத்தில்
திருவாய்மொழிப்பிள்ளை - திருவாய்மொழிப்பிள்ளை என்கிற ஆசார்யன் தாம் உபதேசித்த - தாம் உகந்து உபதேசித்த ஆரணங்களையும் ஆழ்ந்த பொருளுடையவற்றையெல்லாம்
நேர் தன்னின் படியை தணவாத சொல் - சிறிதும் கூட்டாமலும் குறைக்காமலும் அப்படியே பேசுபவரான
மணவாளமுனி - மணவாளமாமுனி
தன் அன்புடன் செய் - தன்னுடைய அதீத அன்பினாலும் மிகுந்த ஈடுபாட்டாலும் உகந்தருளின
உபதேசரத்னமாலை தன்னை - உபதேசரத்னமாலை என்னும் அற்புத பிரபந்தத்தை
தம் நெஞ்சு தன்னில் - தன்னுடைய ஹ்ருதய கமலத்திலே
தரிப்பவர் - ஆழ்ந்து ஈடுபட்டு பதிப்பவர்களுடைய
தாள்கள் சரண் நமக்கே. - திருவடிகளே நமக்கு தஞ்சம்.
உபதேச இரத்னமாலை - பாசுரம் 1 :
எந்தை திருவாய்மொழிப்பிள்ளை இன்னருளால்வந்த உபதேச மார்க்கத்தைச் சிந்தை செய்துபின்னவரும் கற்க உபதேசமாய் பேசுகின்றேன்மன்னிய சீர் வெண்பாவில் வைத்து
எந்தை - என் ஸ்வாமியான திருவாய்மொழிப்பிள்ளை - திருவாய்மொழிப்பிள்ளை என்கிற திருமலையாழ்வாருடைய
இன்னருளால் வந்த - பரம கிருபையால் கிடைத்த
உபதேச மார்கத்தை சிந்தை செய்து - அவர் தாம் உபதேசித்த வழியை பின்பற்றி
பின்னரும் கற்க - தொடர்பவர்கள் அனைவரும் கற்கும் வண்ணம்
உபதேசமாய் பேசுகின்றேன் - உபதேசம் செய்வதை போல் கூறுகின்றேன்
மன்னிய சீர் வெண்பாவில் வைத்து - ஆச்சார்யர்களின் பெருமைகளையும் குணங்களையும் "மன்னியசீர் வெண்பா" என்னும் வெண்பாவில் வைத்து.
உபதேச இரத்னமாலை - பாசுரம் 2 :
கற்றோர்கள் தாமுகப்பர் கல்விதன்னில் ஆசையுள்ளோர்பெற்றோமென உகந்து பின்பு கற்பர் – மற்றோர்கள்மாச்சரியத்தால் இகழில் வந்தென் நெஞ்சே இகழ்கைஆச்சர்யமோ தானவர்க்கு
கற்றோர்கள் தாமுகப்பர் - கல்வி கேள்விகளில் சிறந்தவர்கள் இப்பிரபந்தத்தை உகப்பாய் ஏற்றிடுவார்
கல்விதன்னில் ஆசையுள்ளோர் - கற்பதனில் ஆசையுள்ளோர்
பெற்றோமெனவுகந்து - இது கிடைக்கப்பெற்றோமே என கொண்டாடி
பின்புகற்பர் - பிறகு இப்பிரபந்தத்தை கற்பார்கள்
மற்றோர்கள் - மேலே சொன்னது போல் இவ்விரண்டு நிலைகளிலும் சேராதோர் மாச்சர்யத்தாழிகளில் - வெறுப்பினால் இதனையிகழ்ந்தால்
வந்ததென்நெஞ்சே! - நெஞ்சே, நமக்கு என்ன இழப்பு உள்ளது?
இகழ்கை - இப்படிப்பட்ட கிரந்தத்தினை இழப்பதென்பது
ஆச்சர்யமோதானவர்க்கு - ஆச்சர்யமானதா? (இல்லையே)
உபதேசஇரத்னமாலை - பாசுரம் 3:
ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல் வாழிதாழ்வாதுமில் குரவர் தாம் வாழி – ஏழ்பாரும்உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழிசெய்யமறை தன்னுடனே சேர்ந்து
ஆழ்வார்கள் வாழி - பன்னிரு ஆழ்வார்களுக்கு பல்லாண்டு வாழி
அருளிச்செயல் வாழி - அவ்வாழ்வார்கள் அருளிசெய்த நாலாயிர திவ்யப்பிரபந்தங்கள் வாழி
தாழ்வாதுமிழ் - குறைவொன்றும் இல்லாத
குரவர் தாம் வாழி - ஆச்சார்யர்கள் வாழி
ஏழ்பாரும் உய்ய - ஏழுலகத்தினில் வாழ்பவர்கள் யாவரும் வாழ
அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி - உபயமாக ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் அருளிய அனைத்தும் வாழி
செய்யமறை தன்னுடனே சேர்ந்து - இவை அனைத்தும் வேதங்களோடு கூடி வாழ்ந்திடுகவே
உபதேச இரத்னமாலை - பாசுரம் 4 :
பொய்கையார் பூதத்தார் பேயார் புகழ்மழிசை
அய்யன் அருள்மாறன் சேரலர்கோன்துய்யபட்ட
நாதன் அன்பர் தாள் தூளி நற்பாணன் நற்கலியன்
ஈதிவர் தோற்றத் தடைவாமிங்கு
பொய்கையார் பூதத்தார் பேயார் புகழ்மழிசை
அய்யன் அருள்மாறன் சேரலர்கோன்துய்யபட்ட
நாதன் அன்பர் தாள் தூளி நற்பாணன் நற்கலியன்
ஈதிவர் தோற்றத் தடைவாமிங்கு
பொய்கையார் - இப்பூவுலகில் முதலில் தோன்றிய ஆழ்வார் பொய்கையாழ்வார்
பூதத்தார் - பூதத்தாழ்வார் இரண்டாமவர்
பேயார் - மூன்றாவதாக தோன்றியவர்
புகழ்மழிசை ஐயன் - புகழையுடைய திருமழிசை ஆழ்வார் நான்காவதாக தோன்றினவர் அருள்மாறன் - திருமாலின் அருள் நிரம்பப்பெற்ற ஸ்வாமி நம்மாழ்வார் ஐந்தாவதாக தோன்றினார்
சேரலர்கோன் - சேர குல மன்னனான குலசேகராழ்வார் ஆரமவர்
துய்யப்பட்ட நாதன் - பவித்ரமான பரிசுத்தமான பெரியாழ்வார் ஏழாவதாக அவதரித்தவர் அன்பர்தாள்தூளி - நண்பரான தொண்டர்களின் பாத தூளி தானே என்னும்படி வந்து தோன்றின தொண்டரடிப்பொடியாழ்வார் எட்டாமவர்
நற்பாணன் - லோகாசாரங்கமுனிவரால் கல்லடி பட்டாலும் சாத்விகமாக அவ்விடம் விட்டு நகர்ந்த நம் திருப்பாணாழ்வார் ஒன்பதாவதாக வந்து தோன்றியவர்
நன்கலியன் - நம் நாராயணனே "கலியனோ?" என்று வியந்த திருமங்கையாழ்வார் பத்தமாவர்
ஈதிவர் - (ஈது + இவர்) இதுவே இவர்களது
தோற்றத்தடைவாமிங்கு - (தோற்றத்து அடைவு) தோன்றின வரிசைக்கிரமம்.
Comments
Post a Comment