அனுமானும் மைனாக பர்வதமும்:
இப்படி அனுமான் வேகமாக செல்லும்போது சமுத்திர ராஜனானவன் இஷ்வாகு குல திலகரான சகர மஹாராஜாவால் தோண்டி (இதனால் தான் கடல் சாகரம் என்று அழைக்கப்படுகின்றது) வளர்க்கப்பட்டவன் ஆனபடியால் இஷ்வாகு குலத்தில் உதித்த ராமபிரானுக்கு கைங்கர்யம் செய்கின்ற அனுமானுக்கு உபகாரம் செய்ய எண்ணி அவனுடைய சமுத்திரத்தில் மூழ்கியிருக்கும் மைநாகம் என்னும் பர்வதத்திடம் (மலையிடம்), "மலைக்கரசனே! ராமகார்யத்தின் பொருட்டு ஆகாய மார்கமாய்வரும் அனுமான் சற்று தங்கி இளைப்பாறும் பொருட்டு நீ உடனே நீரிலிருந்து ஆகாயம் நோக்கி மேலெழும்பி உபசரிப்பாயாக!" என்றான். அப்படியே அம்மைநாகமும் நீரிலிருந்து மேல் எழும்பி நின்ற அப்பர்வதத்தை அனுமான் மோதி அமிழ்த்திவிட்டான்.
அப்போது மிகவும் சந்தோஷித்து மைநாகம் ஒரு மானிட ரூபம் கொண்டு பர்வதத்தின் சிகரத்தில் நின்று கொண்டு அனுமானிடம், "வானரர்களில் உத்தமமான வீரா! உன்னுடைய செயல் போற்றுதலுக்குரியது. அதனால் என்னுடைய என்னுடைய சிகரங்களில் சிறிதுநேரம் இருந்து இளைப்பாறி பிறகு செல்வாயாக; ராமனுடைய முன்னோர்களால் வளர்க்கப்பட்ட சமுத்திரராஜன் உனக்கு உதவிசெய்யும் பொருட்டு என்னை ஏவினான்; ஆகையால் நீ அவனுக்கு மதிப்பளிக்கவேணும்; என்னிடம் தாராளமாயும் ஏராளமாயும் இனியவைகளாயும் உள்ள பழங்களையும் காய் கிழங்குகளையும் ஏற்றுக்கொண்டு இளைப்பாறிச் செல்வாயாக."
"மேலும் எனக்கும் உனக்கும் கூட ஒரு சம்பந்தமுண்டு. எப்படியெனில், க்ருத யுகத்தில் மலைகளுக்கெல்லாம் சிறகுகள் உண்டாயிருந்தன. அதனால் அவை பக்ஷி அரசன் கருடனைப்போல வேகமாக பல திசைகளிலும் பறந்து திரிந்ததைக்கண்டு தேவர்களும் ரிஷிகளும் முற்றுமுள்ளோரும் தமக்கு துன்பம் நேருமோ என்று அஞ்சினமையால் இந்திரன் தனது வஜ்ராயுதத்தினால் அவற்றின் சிறகுகளை கண்டவிடத்தில் வெட்டினான். அதைக்கண்டு அஞ்சியிருந்த என்னையும் இந்திரன் துரத்திவரும்போது, மஹாத்மாவான உன்னுடைய தந்தை வாயு பகவான் என்னை இந்த உப்பு சமுத்திரத்தில் தள்ளப்பட்டு சுகமாக வசித்துவருகிறேன். அதனால், நான் உனக்கு மிகவும் நன்றிக்கடன்பட்டவன் ஆவேன். எனவே, நீ என் போன் மயமான சிகரங்களின் மீது சிறிது நேரம் இருந்து எங்களை களிப்படைய செய்வாயாக."
இதைக்கேட்ட அனுமான், "பர்வதராஜனே, நான் மிகவும் சந்தோஷமடைந்து உங்களுடைய விருந்தோம்பலையும் பெற்றேன். மிகவும் அவசரமான ஒரு காரியத்திற்காக நான் சென்றுகொண்டிருக்கிறேன்; அதை நினைக்கும் பொது எனக்கு நெஞ்சம் பதறுகின்றது. மேலும் ஒருக்காலும் நடுவில் நிற்பதில்லை என்கிற உறுதியையும் மேற்கொண்டுள்ளேன்." என்று கூறி புன்னகையுடன் தன கையால் பர்வதராஜனை தட்டிக்கொடுத்தபடியே தன் பயணத்தை தொடர்ந்தான்.
Comments
Post a Comment