ஒவ்வொருவரின் மனதிலும் பல சிறந்த எண்ணங்கள் ஒவ்வொருநாளும் தோன்றிக்கொண்டு தான் இருக்கும். ஆனால் எந்த அளவுக்கு அதை நாம் நம் வாழ்க்கையில் செயல்படுத்துகிறோம் என்பதை பொறுத்து தான் அந்த எண்ணங்களின் சொந்தக்காரனாக நாம் ஆக முடியும். இல்லாவிட்டால் நம்மைப்போன்ற நல்ல எண்ணங்கள் தோன்றி நன்மை செய்யும் மற்றவர்களை பார்த்தோ அல்லது சினிமாவில் பார்த்தோ ஏக்கப்பெருமூச்சு விட்டுக்கொள்ளவேண்டியது தான்.
முதலில் நாம் மிகவும் சிறந்தவர்கள், சிறப்பான பல செயல்களை செய்வதற்காக இந்த உலகில் பிறவி எடுத்தவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அது மிகவும் அவசியம். ஏன் என்றால் அது தான் சுய-பலம். பல நேரங்களில் நம்முடைய எண்ணங்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ள கூடாது, முடியாதும் கூட. அந்த சூழ்நிலைகளில் அந்த எண்ணங்களை அப்படியே மூட்டை கட்டி வைத்து விடுவதா என்ன? இல்லை, அதனை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்கிற உறுதியை நாம் எப்போதும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
சரி, அப்படி செயல்படுத்தும் போது நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய, சமாளிக்க வேண்டிய பல விஷயங்களைத்தான் நாம் இப்போது பார்க்க இருக்கிறோம். எப்படி இவற்றை சமாளிப்பது, இவர்களை சமாளிப்பது என்பது போன்ற பல விஷயங்களை நாம் இங்கு விவாதிக்கலாம். அதனை, அவர்களை சரிசெய்யவும் முயற்சிசெய்யலாம்.
கோபம்
இது நம்முடைய மிகப்பெரிய பலஹீனம். ஆனால் பலநேரத்தில் இது பலமாகவும் நமக்கு தோன்றலாம். ஆனால், நான் மிகவும் கோழையாக இருக்கிறேன் என்பதை வெளிப்படுத்தும் விதமாக இருப்பது தான் கோபம். நான் மிகவும் இயலாதவனாக இருக்கிறேன் என்பதை வெளிப்படுத்தும் விதமாக இருப்பது தான் கோபம். நான் எதற்கும் பயன்படாதவனாக இருக்கிறேன் என்பதை வெளிப்படுத்தும் விதமாக இருப்பது தான் கோபம். ஏன் என்றால் இதையெல்லாம் உங்களால் செய்யமுடிந்தால் ஏன் கோபப்படவேண்டும்? செய்துவிட்டு போய்விடலாமே? ஆக இயலாமை தான் கோபம் என்று புரிந்துகொள்ளுதல் அவசியம்.
ஒரு உதாரணத்தை பார்ப்போம். ஒரு மாணவன் நன்றாக படிக்கிறான், நல்ல பண்புகளோடு இருக்கிறான், எல்லோரும் சிறந்த மாணவன் என்று அவனை அழைக்கிறார்கள் என்றால், மற்ற மாணவர்களுக்கு அது எவ்வாறு தோன்றும்??? சிலருக்கு, அவனை அழைப்பதால் நமக்கென்ன? என் நிலை வேறு என்று ஒதுங்கி போகிறவர்கள் ஒரு ரகம். அது என்ன, அவனை மட்டும் சொல்வது, நானும் அப்படிதான், ஆனால் என்ன எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று எண்ணுபவர்கள் மற்றொருரகம். நான் இப்படித்தான், என்னை பாராட்டவேண்டாம். ஆனால் அவனையும் புகழ வேண்டாமே? இது இன்னொரு ரகம். மற்றவர்கள் புகழ்வதற்காகவே அவன் எவ்வாறு செய்கிறான், இது ஒரு ரகம். ஆனால் மிக முக்கியமான ஒரு ரகம், அவனை புகழ்வதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை! - இதுதான் இயலாமை.
ஏனென்றால் இத்தகைய எண்ணங்களை உடையவர்களால் தங்களை திருத்திக்கொள்ளவே முடியாது. இவர்களுக்கு காரணமே தெரியாது ஏன் மற்றொருவரை வெறுக்கிறோம் அல்லது அவர்களைக்கண்டால் கோபப்படுகிறோம் என்று! ஆனால் கோபம் வரும், சில நேரங்களில் அதனை வெளிப்படையாகவே பார்க்கலாம். இங்கு வெளிப்படுத்துபவர்களும் பல ரகங்களில் உண்டு. நான் பொறாமைப்படவில்லை ஆனால் பிடிக்கவில்லை என்பார்கள். பிடிக்கும் என்பதற்கு பல காரணங்களை அடுக்குவார்கள், ஆனால் பிடிக்காது என்பதற்கு, ஒரே காரணம் "பிடிக்கவில்லை" என்பார்கள். சிலர் "கண்டாலே பிடிக்கவில்லை!" என்பார்கள்.
பலவகையான காரணங்களை சொல்லி அடுக்குவார்கள், ஆனால் உண்மையை புரிந்துகொள்ள மாட்டார்கள். உண்மையை எடுத்து சொன்னாலும் நம்மையும் விரோதியாக பார்ப்பார்கள். எவை அனைத்திற்கும் காரணம் "கோபம்" என்னும் "இயலாமை" மட்டுமே என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அது தான் உண்மை. இங்கு இதற்கு இன்னொரு தொடர்புடைய விஷயம் உள்ளது. அது தான் ஆசை. "துன்பத்திற்கு காரணம் ஆசை", "ஆசையை ஒழித்தால் துன்பத்திலிருந்து விடுபடலாம்" - இந்த வரிகளை நீங்கள் படித்திருக்கலாம், கேட்டிருக்கலாம், ஆனால் முயற்சி செய்திருக்கிறீர்களா?
இப்போது நாம் விவாதித்துக் கொண்டிருக்கும் கோபத்திற்கும் ஆசைக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. ஏன் என்றால் ஆசைதான் அனைத்திற்கும் ஆதாரமாக திகழ்கிறது. அது தன்னை பல இடங்களில் வெளிக்காட்டிக்கொள்வதில்லை. ஆனால் தன்னுடைய வேலையை சிறப்பாக செய்துவிட்டு போகும். இப்போது நாம் ஆசைக்கும் கோபத்திற்கும் உள்ள ஆழ்ந்த தொடர்பைப்பார்க்கலாம் ஒரு உதாரணத்தின்மூலம்.
நம் வீட்டிற்கு அருகில் ஒரு இடம் (வீட்டுமனை/காலி இடம்) உள்ளது. அதனை நாம் வாங்கிவிட வேண்டும் என்று நாம் நினைக்கலாம். அது ஒரு ஆசை. (இங்கு அவசியம்/அவசியமற்ற/நல்ல/கேட்ட/நியாயமான/தீய ஆசையா போன்ற விவாதங்களை பிறகு வேறொரு பதிவில் பார்க்கலாம்) அந்த ஆசைக்காக நாம் கடினமாக உழைத்திருப்போம். கடைசியில் எதோ ஒரு காரணத்தினால் நாம் வாங்குவதற்கு முன்னால் யாரோ வாங்கிவிட்டார்கள் என்றால் அவர்கள் மீது நமக்கு எற்படும் ஒரு உணர்வு தான் "கோபம்" (தூய தமிழில் "க்ரோதம்" என்றழைப்பார்கள்).
அதிலும் நமக்கு நன்கு தெரிந்தவர்கள் வாங்கிவிட்டார்கள் என்றால் அவ்வளவு தான். நம் வாழ்க்கை முழுவதும் அவர்கள் நம் விரோதிகள் தான். அப்படி நாம் அவர்களை பாவிப்போம். இங்கு கவனித்துப்பார்த்தால், ஆசை தான் முதலில் ஆரம்பித்தது, அது "இயலாமல்" போனதால், அதை "தாங்கிக்கொள்ள முடியாததால்", அதனை வெளிப்படுத்திய உணர்வு தான் கோபம். இதை படிக்கும் பலர் நினைக்கலாம், நாங்கள் அப்படி அல்ல என்று, இது உங்களுக்கான பதிவு இல்லை நண்பர்களே! இப்படியும் சிலர் - இது அவர்களுக்காகவே! சரி, சிலர் வெளிப்படுத்துவதே இல்லையே? என்றால், அவர்கள் இந்த பிரச்சனைக்காக இல்லாமல் வேறு காரணங்களுக்காக வெளிப்படுத்தலாம், நிராகரிக்கலாம், அவமானப்படுத்தலாம், சில நொண்டிச்சாக்குகளை சொல்லி பல விதங்களில் வெளிப்படுத்தலாம். ஆக, எப்படியோ வெளிப்படுத்தியே தீருவார்கள்.
சரி, இந்த எதாவது வகையில் நீங்கள் இருந்தால், நண்பர்களே, இதை படித்த உடனே என் தாழ்மையான வேண்டுகோள், மீண்டும் ஒரு முறை படியுங்கள், நாம் அப்படித்தானா என்று சுய பரிசோதனை செய்யுங்கள், அப்படிதான் என்றால், ஒத்துக்கொள்ளுங்கள். அப்போது அது தவறாக மட்டுமே மாறிவிடும், நிச்சயம் திருத்திக்கொள்ளலாம். ஆனால் படித்த பின்னரும், அப்படி இருந்தாலும், இல்லை என்று உங்களை நீங்கள் ஏமாற்றிக்கொள்ளாதீர்கள். அது குற்றமாக மாறிவிடும். நிச்சயம் குற்றம் தண்டிக்கப்படும். என்னை யார் தண்டிப்பார்கள் என்றால், வேறு யாரும் அல்ல, உங்கள் "மனசாட்சி" மட்டுமே.
Comments
Post a Comment