துருவ மஹாராஜருடைய வைபவம்
அதைக் கேட்ட துருவன், “தாயே! நீ சொன்ன வார்த்தைகள், சுருசி சொன்ன கொடிய நஞ்சினால் பிளந்த என் இதயத்தில் பதியவில்லை. ஐஸ்வர்யகர்வத்தால் அவளால் நிராகரிக்கப்பட்ட நான், மிகவும் உத்தமமான உயர்ந்த பதவியை அடைய ப்ரயத்தனம் செய்கிறேன். புண்ணியசாலி என்று நீ கொண்டாடுகின்ற சுருசியின் கர்ப்பத்தில் பிறவாமல்,உன்னுடைய கர்பத்திலே நான் பிறந்தவனானாலும், என்னுடைய முயற்சி பலன் அளிக்காமல் போகாது.
என் அண்ணன் உத்தமனே, என் தந்தையின் ராஜ்யத்தை ஆளட்டும். நான் என்னுடைய முயற்சியினாலும், சக்தியினாலும் அதைவிட உயர்ந்த பதவியை நிச்சயம் அடைவேன். ஒருவர் கொடுத்ததைப் பெற்று மகிழாமல் நானே முயன்று, என் தகப்பனுக்கும் துர்லபமான மிகவும் உயர்ந்த பதவியை எனது தவத்தினால் சம்பாதிக்கிறேன்!" என்று சொல்லித் தன் தாயின் அனுமதியையும் ஆசியையும் பெற்று, அங்கிருந்து அதிவிரைவாகப் புறப்பட்டு நாட்டைக் கடந்து, அருகாமையிலிருந்த ஒரு காட்டுக்குச் சென்றான். அங்கே, மான் தோல்களைத் தரித்து, குசப்புல்லை
ஆசனமாகக் கொண்டு, ஏழு முனிவர்களான சப்த ரிஷிகள் அமர்ந்திருந்தார்கள். அவர்களைக் கண்ட துருவன் வணங்கி, "மஹாமுனிவர்களே! நான் மன்னன் உத்தானபாதனுக்குச் சுநீதி வயிற்றில் பிறந்த மகன். துருவன் என்பது என் பெயர். நான் மிகவும் மனக்கவலையுடன் இங்கு தங்கள் முன் வந்து நிற்கின்றேன்!'' என்றான். அதற்கு மஹாமுனிவர்கள், "ராஜகுமாரனே! நாலைந்து வயதுள்ளவனாக இருக்கிற சிறியவனான உனக்கும மனக்கிலேசம் உண்டாகக் காரணம் என்ன? உன் தந்தை வாழ்ந்து கொண்டிருப்பதால், பாரமில்லையே? உன் ஆசைக்கு உரிய பொருள் கிடைக்கவில்லையே என்று மன்னன் மகனான நீ வருந்த வேண்டியிராது!
உன் சரீரத்தில் எந்தவிதமான நோயும் இருப்பதாக உன் தோற்றத்தில் தெரியவில்லை! அப்படியிருக்க உன் மன வெறுப்புக்குக் காரணம் என்ன?" என்று சப்த ரிஷிகள் வினவ, "என் தாய்க்குச் சக்களத்தியாகிய சுருசி சொன்ன வார்த்தைகளால் எனக்கு உண்டான வெறுப்பின்காரணமாக அவமானந்தாங்கமாட்டாமல் இங்கு வந்தேன்'' என்றான் துருவன். அதைக் கேட்டதும், ஏழு முனிவர்களும் ஒருவருடன் ஒருவர் “இந்தச் சிறுவன் மாற்றாந்தாயின் வார்த்தைகளைப் பொறுக்கமாட்டாமல் இங்கு வந்து விட்டான்.
இவனது ராஜ கம்பீரத்தைப் பார்த்தீர்களா? இவன் எள்ளளவானாலும் அவமானம் சகிக்க முடியவில்லையே?'' என்று பேசிக் கொண்டு, துருவனை நோக்கி, “ராஜமைந்தனே! நீ மனஸ்தாபங்கொண்டு மனம் நொந்து, என்ன செய்ய வேண்டும் என்று சங்கல்பம் செய்திருக்கிறாய்? உனக்கு எங்களால் என்ன சகாயம் ஆகா வேண்டும்?" என்று வினவ, துருவன் அவர்களை நோக்கி, ''மஹாமுனிவர்களே!நான், ராஜ்யத்தையோ அல்லது மற்ற பொருள்களையோ விரும்புபவன் அல்ல.
ஆனால் இதற்கு முன் எவன் ஒருவனாலேயும் அனுபவிக்கப்படாததாய், அரிதிலும் அரிதாய் மிக அபூர்வமானதாய், சகல ஸ்தானங்களுக்கும் மேம்பட்ட மிக உன்னதமாயிருக்கிற ஸ்தானத்தை நான் அடைய விரும்புகிறேன். இந்த மனோரதம் நிறைவேறுவதற்கான உபாயத்தை தாங்கள் எனக்கு அருள்செய்ய வேண்டும்'' என்றான். அதற்குச் சப்த ரிஷிகள் ஒவ்வொருவராகப் பின்வருமாறு கூறினார்கள்.
''ராஜகுமாரனே! ஸ்ரீகோவிந்தனுடைய பாதாரவிந்தங்களையடைந்து ஆராதனை செய்து நீ சர்வ உத்தமமான பதவி கிடைக்கப்பெறுவாயாக! நீ பக்தியுடன், அச்சுதனை ஆராதிப்பாயாக!" என்றார் மரீசி முனிவர்.
''ராஜகுமாரனே! லோகேஸ்வரனான ஜனார்த்தனன், யாரைக் கடாட்சிக்கின்றானோ, அவனே, அக்ஷயமான திவ்யஸ்தானத்தை உடையவனாவான், என் வாக்கு சத்திய வாக்கென்று நினைப்பாயாக!'' என்றார் அத்திரி முனிவர்.
"சராசராத்மகமான சகல பிரபஞ்சமும் எவனுடைய விரல் நுனியில் இருக்கிறதோ, அந்தக் கோவிந்தனுடைய சரண கமலங்களை அர்ச்சனை செய்வாயாக. சர்வோன்னதப் பதவியை அடைவாய்!”, என்றார் ஆங்கிரசர்.
“எவன் ஒருவன் பரப்ரஹ்மமும் பரமப்பிராப்பியமாகவும் சர்வ வியாபியாகவும் இருக்கிறானோ அந்த ஸ்ரீ ஹரியை ஆராதனம் செய்வதால், அத்தியந்தம் துர்லபமான மோட்சத்தை அடையலாம் என்றால், இதர ஸ்தானங்களை அடைவதில் என்ன சந்தேகம்?'' என்றார் புலஹ முனிவர்.
“எவன் யக்ஞங்களாலே ஆராதிக்கப்படும் புருஷனாகவும் யக்ஞஸ்வரூபியாகவும் யக்ஞங்களுக்கு அதிபதியாகவும் இருக்கும் மகாபுருஷனோ, அந்த ஜனார்த்தனன் திருவுள்ளங்கொண்டானானால் அடையத் தகாத ஸ்தானம் ஒன்று உண்டோ?" என்றார் ப்ருஹு மாமுனிவர்.
"பூர்வத்திலே இந்திரன் ஜகத்பதியான எவனை ஆராதித்துச் சர்வ உன்னதமான இந்திரப் பதவியை அடைந்தானோ, அப்படிப்பட்ட யக்ஞேஸ்வரனான ஸ்ரீவிஷ்ணுவை ஆராதனை செய்வாயாக'' என்றார் புலஸ்திய முனிவர்.
"குழந்தாய்! ஸ்ரீவிஷ்ணு பகவானை ஆராதனை செய்வாயாகில் இதுவரையில் இல்லாத நூதனமான (புதியதான) ஸ்தானம் ஒன்றை நீ மனத்தால் நினைத்தாலும், அதையும் சித்தமாக அடைவாய். அப்படியிருக்க, முன்பே படைக்கப்பட்ட மூன்று உலகங்களுக்கும் உட்பட்ட மேலான ஸ்தானத்தை அடைவதற்குச் சந்தேகம் என்ன?'' என்று வசிஷ்ட முனிவர், கூறினார்.
அவர்கள் கூறியவற்றைக் கேட்ட துருவன், ''மஹாமுனிவர்களே! தாங்கள், ஆராதிக்க வேண்டிய அச்சுதனை எனக்கு தெரியும்படி வழிபடும்படி அருளிச் செய்தீர்கள். அவ்வெம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன் கிருபை செய்ய ஜெபிக்க வேண்டிய மந்திரத்தையும் ஆராதனை முறைகளையும் எனக்கு உபதேசிக்க வேண்டும்'' என்று பணிவுடன் கேட்டான்.
''ஓ ராஜபுத்திரனே! ஸ்ரீவிஷ்ணுவிடம் பக்தி செய்ய விரும்பும் மனிதன் முதலாவதாக தன்னுடைய சுகங்களில் மனதை தொலைப்பதை விடுத்தது, மனதை நிர்மலமாக்கிக்கொள்ள வேண்டும். பிறகு அந்த மனதை முகுந்தனுடைய சரணாரவிந்தங்களை தன்னுள்ளே நிறுத்தி, வேறு நினைவில்லாமல் அந்தத் திருவடிகளையே பாவித்துக் கொண்டு, தூயவனாய், வியஷ்டி சமஷ்டி ரூபமாய் பிரகிருதியும் புருஷனும் சரீரமாகவுமுள்ள சுத்த ஞானமயனான வாசுதேவனுக்கு தெண்டன் சமர்ப்பிக்கிறேன் என்ற பொருளையுடைய (த்வாதஸாக்ஷரி) மகாமந்திரத்தை ஜெபிக்கவேண்டும். உனது பிதாமகனான ஸ்வாயம்புவமனுவானவர் இந்த மகா மந்திரத்தினாலே ஜனார்த்தனனை உபாசித்தபடியால் பகவான் திருவுள்ளம் உகந்து, அந்த மனுவுக்கு அவர் விரும்பியபடியே திரிலோக துர்லபமான ஐஸ்வர்யத்தைப் ப்ரசாதித்து அருளினார். நீயும் அப்படியே அந்த மகாமந்திரத்தை ஜெபித்து ஸ்ரீ:யப்பதியை ஆராதனை செய்வாயாக!" என்று கூறினார்கள்.
சப்த ரிஷிகளிடமும் உபதேசம் பெற்ற துருவன் மனமகிழ்ந்து, அவர்களை வணங்கி விட்டு, யமுனை நதி தீரத்திலிருந்த மதுவனத்துக்குச் சென்று அங்கு, மஹாமுனிவர்கள் உபதேசித்த வண்ணம் ஸ்ரீவிஷ்ணுவைத் தனது இதய கமலத்தில் தியானித்து தன் தவத்தை ஆரம்பித்தான். இப்படி ஒரே நிலையாகத் தவம் செய்து கொண்டிருந்த துருவனின் சித்தத்தில் சர்வ பூதங்களிலும் உள்ளவனான ஸ்ரீஹரி பகவான் அதிகப் பிரகாசமாய்த் தோன்றியருளினார்.
மைத்ரேயரே! இவ்விதம் அந்தப் பரம யோகியான துருவனுடைய இதயத்தில் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் எழுந்தருளியிருந்ததால் சகலத்தையும் தரிக்கிற பூதேவி, அந்தப் பரமயோகியைத் தரிக்க மாட்டாமல் இருந்தாள். பூமியில் துருவன் தன் இடக்காலை ஊன்றி, வலக்காலை மடித்துத் தவம் செய்தபொழுது, பூமியானது இடது பக்கத்தில் தாழ்ந்தும், வலக்காலை ஊன்றியபொழுது வலப்பக்கம் தாழ்ந்தும் நின்றது. பிறகு, துருவன் ஒரே பாதத்தில் கட்டை விரலால் பூமியில் நின்றபோது, பூமண்டலமே மலைகளுடன் நடுங்கியது. மகா நதிகளும் சப்த சாகரங்களும் கதிகலங்கிப்போயின. இவ்விதமாக மக்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் கலக்கம் உண்டானதைக் கண்டு, அந்த மந்வந்தரத்திலே இருந்த
யாமர் என்னும் தேவதைகள், சித்தங் கலங்கினர். அவர்கள் இந்திரனுடன் ஆலோசித்துத் துருவனுடைய தவத்திற்கு இடையூறு செய்ய முயன்றார்கள். இந்திரனின் கட்டளையை ஏற்ற கூஷ்மாண்டங்கள் என்னும் அதிபயங்கர பூதகணங்கள் அந்த மகாதபஸ்வியான துருவனின் தவத்தைக் கலைக்கப் பல மாயங்கள் செய்தன. துருவனுக்குத் தாயான சுநீதியின் ஸ்வரூபத்தைத் தரித்த மாயை ஒன்று துருவனிடம் வந்து, “மகனே! உன் சரீரம் அபாயமடையக் கூடிய கொடிய தவத்தை உடனே நிறுத்திவிடு. ஐயோ, மகனே! நீண்ட காலம் தவமிருந்து உன்னைப்பெற்றேனடா? அனாதையும் பேதையுமான என்னைத் தனியே அலைய விட்டு மாற்றாந்தாயின் பேச்சிற்காக, நீ இப்படி செய்வது நியாயமா?
கதியற்ற எனக்கு, நீ மட்டும் அல்லவா கதி! ஐந்து வயதுப் பாலகனான நீ எங்கே? மிகவும் நீண்ட கடினமாகிய இந்தத் தவம் எங்கே? பயனற்ற நிறைவேறாத இந்த முயற்சியிலிருந்து உன் மனதைத் திருப்பிக்கொள். மகனே! நீ விளையாடுகின்ற பருவமடா இது! இதற்குப் பிறகு வேதங்களை அத்தியயனம் செய்யும் காலம். அதன் பிறகு மோகானுபவங்களுக்குரிய காலம். அதன் பிறகே, தவம் செய்வதற்குரிய காலமாகும்! விளையாடும் காலத்தில் ஆன்மக்லேசமான தவம் செய்வது நல்லதல்ல. தாயான என் வார்த்தையைக் கேட்டு, இந்தப் பிராயத்துக்குத் தக்கபடி நடந்துகொண்டு, என்னுடன் வரவேண்டிய தான் உனக்கு நியாயம்.
இந்தத் தவத்தை விடாமற்போனால் நான் இப்போதே உன் எதிரில் என் பிராணனைவிட்டு விடுகின்றேன்.'' என்று தன் கண்களிலே கண்ணீர் தாரை தாரையாகப் பெருகக் கதறி அழுது கொண்டு நின்றாள். மாயையான சுநீதியை தன் முன்னால் கண்டும், துருவன் ஸ்ரீமந்நாராயணனின் திவ்விய திருவடிகளிலேயே சித்தத்தை வைத்திருந்ததால், கண் திறந்து பார்க்கவில்லை. பிறகு அந்த மாயா சுநீதி துருவனை நோக்கி, "குழந்தாய்! கோர அரக்கர்கள் உன்னைச் சம்ஹரிப்பதற்காகக் கதை கட்கம் முதலான ஆயுதங்களோடு வருகிறார்கள். இப்பொழுதே உன் தவத்தை விட்டு விட்டு ஓடிவா!'' என்று சொல்லி விட்டு மறைந்து போனாள்.
Comments
Post a Comment