ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
உபதேச இரத்னமாலை
பதவுரை
உபதேச இரத்னமாலை - பாசுரம் 11 :
மன்னியசீர் மார்கழியில் கேட்டையின்று மாநிலத்தீர்
என்னிதனுக் கேற்ற மெனில் உரைக்கேன் - தன்னுபுகழ்
மாமறையோன் தொண்டரடிப்பொடி ஆழ்வார் பிறப்பால்
நான்மறையோர் கொண்டாடும் நாள்.
மன்னிய சீர் - மிகவும் சிறப்பு பொருந்திய
மார்கழியில் கேட்டை இன்று - மார்கழிமாதத்தில் கேட்டை நாள் இன்று
மாநிலத்தீர் - உலகத்தீர்
என்னிதனுக்கேற்றமெனிலுறைக்கேன் - இம்மார்கழி கேட்டைக்கு என்ன சிறப்பு என்றால் சொல்லுகின்றேன்
துன்னுபுகழ் - மிக்க புகழையுடைய
மாமறையோன் - பரம வைஷ்ணவரான (வைதீகரான)
தொண்டரடிப்பொடியாழ்வார் பிறப்பால் - தொண்டரடிப்பொடியாழ்வாருடைய திருவவதாரத்தினால்
நான்மறையோர் கொண்டாடும் நாள் - இது நமக்கான நாள் என்று எல்லா வைதீகர்களும் கொண்டாடும் நாள்
உபதேச ரத்னமாலை - பாசுரம் 12 :
தையில் மகம் இன்று தாரணீயிர் ஏற்றம் இந்தத்
தையில் மகத்துக்குச் சாற்றுகின்றேன் துய்ய மதி
பெற்ற மழிசைப் பிரான் பிறந்த நாள் என்று
நற்றவர்கள் கொண்டாடும் நாள்
தையில் மகம் இன்று - இன்றையதினம் தை மாதத்தில் வரும் மகம் (நக்ஷத்திரம்) நாளாகும்
தாரணியீர்! - உலகோர்களே
தாரணியீர்! - உலகோர்களே
ஏற்றம் இந்த தையில் மகத்துக்கு - என்ன பெருமை இந்த தையில் மகத்திற்கு என்று
சாற்றுகின்றேன் - கூறுகின்றேன்
துய்யமதி பெற்ற மழிசைப்பிரான் - பரிசுத்தமான ஞானமுடைய திருமழிசையாழ்வார்
பிறந்த நாள் என்று - திருவவதாரம் செய்த நாள் என்று
நற்றவர்கள் - பெரும் தவசீலர்கள்
கொண்டாடும் நாள் - குதூகலிக்கும் நாள்
உபதேச இரத்னமாலை - பாசுரம் 13 :
மாசிப் புனர்பூசம் காண்மின் இன்று மண் உலகீர்
தேசித் திவசத்துக்கு ஏது என்னில் -பேசுகின்றேன்
கொல்லி நகர்க் கோன் குலசேகரன் பிறப்பால்
நல்லவர்கள் கொண்டாடும் நாள்
மாசிபுனர்பூசம் காண்மினின்று - இன்றைய தினம் மாசி மாதத்து புனர்வசு நாளாகும்.
மண்ணுலகீர் - உலகோர்களே
தேசித் திவசத்துக் கேதென்னில் - பெருமை இந்த தினத்திற்கு என்னவென்றால்
பேசுகின்றேன் - சொல்லுகின்றேன்
கொல்லிநகர்கோன் - கொல்லி என்னும் நகரத்துக்கு தலைவரான
குலசேகரன் - ஸ்வாமி குலசேகராழ்வார்
பிறப்பால் - திருவவதாரத்தினால்
நல்லவர்கள் - சாதுக்கள்
கொண்டாடும் நாள் - குதூகலிக்கும் நாள்
உபதேச இரத்னமாலை - பாசுரம் 14 :
ஏரார் வைகாசி விசாகத்தின் ஏற்றத்தைப்
பாரோர் அறியப் பகர்கின்றேன் –சீராரும்
வேதம் தமிழ் செய்த மெய்யன் எழில் குருகை
நாதன் அவதரித்த நாள்
ஏரார் - (ஏர் + ஆர்) சீர்மை மிகுந்த
வைகாசி விசாகத்தின் - வைகாசிமாதத்து விசாகநாளின்
ஏற்றத்தை - பெருமையை
பாரோரறியப் - உலகோர்கள் அறிந்துகொள்ள
பகர்கின்றேன் - சொல்லுகின்றேன்
சீராரும் வேதம் - சீர்நிறைந்த வேதத்தை
தமிழ்செய்த மெய்யன் - தமிழில் திராவிடவேதமாக அருளிச்செய்த
எழில் குருகை நாதன் - அழகிய (ஆழ்வார்) திருநகரிக்கு நாதனாகிய ஸ்வாமி நம்மாழ்வார்
அவதரித்த நாள் - அவதாரம் செய்த நாள்
உபதேச இரத்னமாலை - பாசுரம் 15 :
உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பு ஒரு நாள்
உண்டோ சடகோபர்க்கு ஒப்பு ஒருவர் -உண்டோ
திருவாய்மொழிக்கு ஒப்பு தென் குருகைக்கு உண்டோ
ஒரு பார் தனில் ஒக்கும் ஊர்
உண்டோ வைகாசி விசாகத்துக் கொப்பொருநாள் - வைகாசி மாதத்து விசாகத்துக்கு நாளுக்கு ஒப்பு ஒரு நாள் உண்டோ?
உண்டோ சடகோபர்க்கொப்பொருவர் - ஸ்வாமி நம்மாழ்வாருக்கொப்பான ஒரு ஆழ்வார் உண்டோ?
உண்டோ திருவாய்மொழிக்கொப்பு? - திருவாய்மொழிக்கு ஒப்பான பிரபந்தம் ஒன்று உண்டோ?
தென் குருகைக்குண்டோ ஒரு பார்தனில் ஒக்கும் ஊர்? - இந்த உலகில் தென் குருகையென்னும் (ஆழ்வார் திருநகரி) நகருக்கொப்பானதொரு நகர் உண்டோ?
Comments
Post a Comment