துருவ மஹாராஜருடைய வைபவம்
பராசரர் மகரிஷி மைத்ரேய முனிவரைப் பார்த்து, முநி ஸ்ரேஷ்டரே! சுவாயம்புவ மனுவுக்குப் பிரியவிரதன், உத்தானபாதன் என்னும் இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களிலே உத்தானபாதனுக்கு சுருசி, சுநீதி என்னும் இரண்டு மனைவியர் இருந்தார்கள். அவர்களில் சுருசி என்பவள் உத்தானபாதனுக்கு மிகவும் பிரியமுள்ளவளாக இருந்தாள். அவளுக்கு உத்தமன் என்று ஒரு மகன் இருந்தான். அவன் தகப்பனுக்கு மிகவும் ப்ரியமகனாக இருந்தான். சுநீதியிடத்தில் அரசனுக்கு அவ்வளவு ப்ரியமில்லை. சுநீதிக்கு துருவன் என்ற மகன் பிறந்தான்.
அவன் நற்குண நற்செய்கைகளைக் கொண்ட ஒரு உன்னதமான ஆத்மா. ஒருநாள் சின்னஞ்சிறு குழந்தையாகிற துருவன் தன் தந்தையான மன்னன் உத்தானபாதனின் அந்தப்புரத்திற்குச் சென்றான். அங்கே, தன் தந்தையின் மடியில் தன் சகோதரன் உத்தமன் உட்கார்ந்திருப்பதைப் கண்டான். தானும் அவனைப் போல, உட்கார ஆசைப்பட்டு, தந்தையின் அருகே சென்றான். அப்போது சுருசி தன்னருகில் இருந்ததால், துருவன் விருப்பத்தை மன்னன் ஏற்கவில்லை.
இப்படி தன் தந்தையின் மடியின்மீது உட்காரவந்த தன் சக்களத்தி மகனான துருவனைப் பார்த்து, சுருசி ஏளனமாகச் சிரித்து, ''பாலகனே! நீ ஏன் வீண் பிரயத்தனம் செய்கிறாய்? என் வயிற்றில் பிறக்காமல் மற்றொருத்தியின் வயிற்றில் பிறந்த நீ, இத்தகைய உயர்ந்த சிம்மாசனத்தில் இருக்க நினைப்பது விவேகமல்லாதது. நீ இந்த அரசனின் மகன்தான் என்றாலும், சாம்ராஜ்யலக்ஷ்மி நிவாசம் செய்கின்ற இந்தச் சிங்காசனத்துக்கு நீ உரித்தானவன் அல்ல. என் மகனே அதற்குத்தகுதியுடையவனாவான். உன் முயற்சியை வீணாக்காமல், பாக்கியமில்லாத சுநீதி வயிற்றில் நீ பிறந்ததை நினைத்து வருந்தி இங்கிருந்து செல்!" என்று இழிவாகக் கூறினாள்.
அவள் கூறியதைக் கேட்ட துருவன் மனக்கலக்கமடைந்து, தன் தாயிடம் சென்று அழ, அவனுடைய அன்னை சுநீதி தனது மடியில் உட்கார வைத்துக்கொண்டு, “மகனே! உன் அழுகைக்கு காரணம் என்ன? உன் தந்தையை யாராவது அவமதித்தார்களா?" என்று வினவ, அதற்குத் துருவன், தன் மாற்றாந்தாயான சுருசி கூறியவற்றையெல்லாம் தன் தாயிடம் சொன்னான். அதைக் கேட்ட சுநீதி, "மகனே, துருவ! சுருசி சொன்னவை அனைத்தும் உண்மைதான். உண்மையில், நீ சொற்பபாக்கியமுடையவன் தான். ஏனென்றால், மிகவும் புண்ணியம் பெற்ற பிள்ளை தன் மாற்றாந்தாயினாலேயே (சத்ருக்களால்) இப்படி தூற்றப்படுமா? இத்தனையும் உன்னுடைய பூர்வ கர்ம வினையாக நினைத்து, மனக்கலக்கத்தை விட்டு அமைதிகொள். உன்னுடைய பூர்வ கர்ம நற்பயனை யாரும் அபகரிக்க முடியாது!
அதேபோல், செய்யாத கர்ம பலனைக் கொடுக்கவும் யாராலும் முடியாது. பாக்யவான்களுக்கே, மகாராஜசிம்மாசனமும்,ரத கஜ துரக பதாதிகளாகிய நால்வகைச் சேனைகளும், சுகபோகங்களும் கிட்டும். சுருசியானவள் பாக்கியசாலி, கணவன் தன்னிடத்திலேயே ப்ரியமாக இருப்பதற்குப் பாக்யம் செய்திருக்கிறாள். நானோ அவருக்கு மனைவி என்ற பெயரை மட்டுமே உடையவளாய் துக்கப்படுகிறேன். அதே போல் உத்தமன், புண்ணியம் செய்தவன். அதனால்தான் அவன் சுருசியின் மகனாகப் பிறந்தான். சொற்ப பாக்யமுடைய நீ, என் வயிற்றில் பிள்ளையாகப் பிறந்தாய்.
மகனே! இதற்கு நாம் என்ன செய்ய இயலும்? எவனுக்கு அதிர்ஷ்டமோ, அவன் அனுபவிக்கிறான்! அதை ஏற்றுக்கொள்வதுதான் புத்திமான்களின் செயல். அதனால் ஐசுவரியத்தையும், அரச போகத்தையும் நினைத்துத்துன்பப்படாமல் இருக்கக் கற்றுக்கொள். சுருசி கூறியவைகளைக் கேட்டு உன் மனம் பொறுக்காவிட்டால் உனக்கும் அத்தகைய மேன்மை உண்டாவதற்குச் சகல முயற்சிகளையும் செய். தர்மாத்மாவாக, நல்ல நடத்தை உள்ளவனாக, சர்வ பூத தயாபரனாகவும், சர்வஜன மித்திரனாகவும் இருந்து கொண்டு
நீ நல்லவற்றைச் செய்து வந்தால், நீரோட்டம் பள்ளத்தையே நாடிச் செல்வதுபோல, குணவானான மனிதனிடத்தில் புண்ணியங்கள் தானாகவே வந்து சேர்கின்றன மகனே!, பிரயத்தனம் செய்!" என்று கூறினாள்.
Comments
Post a Comment