கலியுக தர்மம்
மைத்ரேய முநி, ஸ்ரீபராசர மகரிஷியை நோக்கி, “முனிஸ்ரேஷ்டரே! உலக சிருஷ்டியையும் வம்சங்களையும் மன்வந்தரங்களின் நிலைகளையும் எனக்கு விளக்கமாகக் கூறினீர்கள். இனி கல்பத்தின் முடிவில் மகாப்ரளயம் பற்றியும் தாங்கள் கூறவேண்டும்!" என்று கேட்டார். "கல்பாந்தத்திலும் ப்ராகிருதத்திலும் பிரளயம் உண்டாகும் விதத்தைச் சொல்கிறேன், கேளுங்கள். நம்முடைய மாதம் பித்ருக்களுக்கு ஒரு நாளாகும். நமது வருஷம் தேவர்களுக்கு ஒரு நாளாகும். இரண்டாயிரம் சதுர்யுகங்கள் பிரம்மனுக்கு ஒருநாள். சதுர்யுகம் என்பது
கிருதயுகம், திரேதயுகம், துவாபரயுகம், கலியுகம் என்ற நான்கும் சேர்ந்ததாகும். இந்த நான்கு யுகங்களும் தேவமானத்தினால் பன்னீராயிரம் ஆண்டுகளாகும். மைத்ரேயரே! கல்பத்தின் ஆதியான கிருதயுகத்தையும் முடிவான கலியுகத்தையும் தவிர மற்றைய சதுர்யுகங்கள் யாவும் சமானமானவையே ஆகும். ஆதிக்ருத யுகத்திலே பிரம்மா எப்படிப்படைக்கிறாரோ, அப்படியே இறுதியான கலியுகத்திலே சம்காரம் செய்கிறார்” என்று பராசரர் சொல்லும்போது, மைத்ரேயர் மற்றொரு விஷயத்தைப் பற்றிக் கேட்க ஆசைகொண்டு, மகரிஷியே! நான்கு பாதங்களால் நடக்கும் தன்மையுடைய தருமம் அழிந்துவிடத் தக்கதான கலியுகத்தின் சொரூபத்தை நன்றாக விளக்கிக் கூறவேண்டும்” என்று கேட்டார்.
அதற்கு பராசர மகரிஷி கூறலானார். மைத்ரேயரே! கலியினுடைய ஸ்வரூபத்தை விவரமாகச் சொல்கிறேன், கேளும். கலியுகத்தில் மனிதரிடத்தில் வர்ணாஸ்ரம ஆசார நல்லொழுக்கங்கள் இராது. ஒழுக்கம் இல்லாததால் ரிக், யஜுர், சாமம் என்ற வேதங்களில் சொல்லப்பட்ட யாகாதி கிரியைகளும் இருக்காது. கலிகாலத்தில் தர்மமான முறையில் திருமணங்கள் நடைபெறாது. குரு சிஷ்ய முறையும் இருக்காது. தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் நடந்துகொள்ளும் முறைமையும் தர்மமும் இராது. அக்கினியில் செய்யத்தக்க தேவ வேள்வி முறைகளும் இல்லாமல் போய்விடும். எந்தக் குலத்தைசேர்த்தவன் ஆனாலும் பலசாலி எவனோ, அவனே எல்லோருக்கும் அரசனாவான்.
எல்லா ஜாதிகளிலேயும் பொருள் உள்ளவனே, கன்னிகாதானம் செய்யத் தகுதியுடையன் ஆவான், அவனை அன்றி, கல்வி ஒழுக்கங்கள் உடையவன் அத்தகுதியுடையவனாகமாட்டான். பிராமணன் எந்த வழியினாலும் தீக்ஷிதனாவானே தவிர சாஸ்திர விதிப்படியாவதிற்கில்லை. கலியில், விதிக்கப்பட்டதே பிராயச்சித்தம் என்பதில்லை. எந்தக் கிரியையும் பிராயச்சித்தமாக ஏற்கப்பட்டு விடும். எவனுக்கு எந்த வாக்கியம் பிரியமோ, சரளமாக வருகிறதோ அதுவே சாஸ்திரமாகும். காளி முதலான எல்லாம் தெய்வமாகக் கொண்டாடப்படும். இன்னாருக்கு இன்ன ஆஸ்ரமம் என்பதிராது. எவனும் எந்த ஆஸ்ரமத்திலும் பிரவேசிப்பான். ஒருவன் தான் விரும்புவது போலப் பட்டினி கிடப்பதும், வருந்துவதும் தவம் செய்வதும் சாஸ்திர ரீதியான தருமமாகக்கருதப்படும்.
அற்பப் பொருள் இருந்தாலும், தான் தனவான் என்ற செல்வச் செறுக்கு ஜனங்களுக்கு உண்டாகும். அதுபோலவே, பெண்களுக்குக் கூந்தல் செம்மையாக இருந்தாலே அழகி என்ற கர்வம் உண்டாகிவிடும். கலியானது முற்ற முற்றப் பொன்னும் மணியும் நல்லவிதமான ஆடைகளும் அழிந்து போகும்போது, மங்கையர்கள் தங்கள் கூந்தலையே அலங்காரமாகப் பெற்றிருப்பார்கள். மேலும் மங்கையர்கள் பொருளில்லாத கணவனை விட்டு, எவனாயினும் பொருளுடையவனாக இருந்தால் அவனையே கணவனாகத் தேடிக் கொள்வார்கள்.
மேலும் தேகசுத்தமில்லாமல், தங்களைப் போஷிப்பதிலேயே மனம் ஊன்றி, ஈனமான எண்ணத்துடன், கடினமாயும் பொய்யாயும் பேசுபவர்களாக இருப்பார்கள். குலமங்கையர்கள் தாங்கள் தீய ஒழுக்கமுடையவராகையால், அத்தகையோரிடம் நட்புக் கொண்டு, தங்கள் கணவனுக்குப் பலவகையான தீமைகளைச் செய்து வருவார்கள். ப்ரம்மசாரிகள் விரத அனுஷ்டானம் இன்றியே வேத அத்தியயனம் செய்வார்கள். இல்லறத்தானோ, சிறிதும் ஹோமம் செய்யாதிருப்பதோடு தக்க பொருள்களையும் தரமாட்டார்கள்.
வானப்பிரஸ்தர்கள், காட்டில் உள்ளவற்றை விடுத்து நாட்டில் உள்ளவற்றையே புசித்து வருவார்கள். ஆட்சியாளர்கள், மக்களைப் பரிபாலனஞ் செய்வதை முக்கியமாக எண்ணாமல் வரி, கட்டணம் போன்று ஏதாவது கூறி குடிமக்களின் பொருள்களைப் பறிப்பார்கள். எவனொருவன் யானை, குதிரை முதலிய சேனைகளை வைத்திருக்கிறானோ அவனவனே அரசனாவான். பலமற்றவன் சேவகனாவான். வைசியர்கள், பயிர் செய்தல், வாணிபம் செய்தல் முதலிய தமது தொழிலைவிட்டு, சூத்திரர்களது தொழிலாகிய பல தொழில்களையும் செய்து பிழைப்பார்கள். சூத்திரரோ சந்நியாசியின் சின்னங்களை அணிந்து, பிக்ஷை வாங்கி உண்டு அநேகர் தங்களைப்பூஜிக்கும்படியான போலிப் பிழைப்பில் ஜீவிப்பார்கள். ஜனங்கள் பசி பஞ்சத்திலும்,
வரி இறுத்தலாலும் துன்பமடைந்து கோதுமை, யவம் விளையும் நீசத் தேசங்களுக்குப் போய் விடுவார்கள். இவ்விதமாக வர்ணாசிரம தர்மங்கள் மாண்டு போய் வேத மார்க்கமே மறைந்து போவதால் மக்கள் பாஷண்டமதங்களைப் பின்பற்றி விடுவார்கள். இதனால் அதர்மம் விருத்தியாகும். அதனால் மக்கள் அதர்மமாக நடக்கத் துவங்கிவிடுவார்கள். அதனால் அதர்மம் வளர்ந்து, மக்களின் ஆயுள் அற்பமாகும். ஆட்சியாளரின் குற்றத்தால், மக்கள் சாஸ்திரங்களுக்கு விரோதமான வீணான தவங்களைச் செய்வார்கள்.
ஆகையால் இளமையிலேயே மரணமுண்டாகும். பெண்கள் ஆறு ஏழு வயதுக்குள்ளாகவே பிள்ளைகளைப் பெறுவார்கள். ஆண்களோ ஒன்பது பத்து வயதிற்குள் பிள்ளையை உண்டாக்கும் திறனுடையவர்களாக இருப்பார்கள். பன்னிரண்டு வயதுக்குள்ளாகவே நரை, திரை, மூப்பு முதலியன உண்டாகும். இந்தக் கலியின் முதிர்ச்சியில் மக்கள் இருபது வயதுக்கு மேல் பிழைத்திருக்கப்போவதில்லை. கலியுகத்தில் மக்கள் அற்பஞானமுடையவர்களாகவும் வீணான தவவேடங்களைப் பூண்டு கெட்ட நினைவை கொண்டவர்களாகவே இருப்பார்கள். அதனால் விரைவில் நசிந்தே போவார்கள்.
மைத்ரேயரே! தருமம் எத்தனைக்கெத்தனை இழிவானதாகிறதோ, அத்தனைக்கத்தனை கலி விருத்தியாயிற்று என்று நாம் தெரிந்து கொள்ளவேண்டும். மேலும் எப்போது பாஷண்டர்கள் அதிகமாகின்றனரோ, எப்போது வேதம் அறிந்த நல்மனிதனுக்குத் தீங்குகள் நேரிடுகின்றனவோ, அப்போது கலி முதிர்ந்துள்ளது என்று புரிந்துகொள்ள வேண்டும். எப்போது யக்ஞங்களுக்கு ஈஸ்வரனான ஸ்ரீபுருஷோத்தமனை மக்கள் யக்ஞங்களில் ஆராதிப்பதில்லையோ, எப்போது வேத வாக்கியங்களில் நாட்டமும் ப்ரீதியுமின்றி, பாஷண்ட வாக்கியங்களில் இச்சையுண்டாகுமோ அப்போது கலிபுருஷன் மகாபலம் பொருந்தியிருக்கிறான் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
ஏனென்றால் கலியுகத்தில் ஜனங்கள் பாஷண்டரால் கெடுக்கப்பட்டு, படைப்புக் கர்த்தாவாகவும் ஸர்வேஸ்வரனாகவும் இருக்கும் ஸ்ரீவிஷ்ணுவை ஆராதிக்க மாட்டார்கள். மேலும் மக்கள் பாஷண்ட மத மந்த புத்தியால், "தேவதைகள் எதற்கு? வேதங்கள் ஏன்? ப்ராமணரால் ஆவதென்ன? தண்ணீர் விட்டுக் கழுவுவதால் மட்டும் என்ன சுத்தம்?” என்று ஏதேதோ பிதற்றுவார்கள். இத்தகைய அதர்மங்களாலேயே, மேகங்கள் அற்ப மழையைப் பொழியும். பயிர்கள் மிக அற்பமாகவே விளையும்.
பொருள்கள் காரங்குறைந்திருக்கும். ஆடைகள் சணற் கோணிகள் போலிருக்கும். மரங்கள், வன்னி மரங்களைப் போல அற்பமாகவே இருக்கும். ஜாதிகள் எல்லாமே சூத்திர ஜாதி போலிருக்கும். மேலும் தானியங்கள் அணுக்கள் போலவும் பால் நெய் போலவும் சந்தனப் பூச்செல்லாம் கோரைக் கிழங்குப் பூச்சைப் போலவும் ஆகிவிடும்.
முனிவரே! கலியுகத்தில் மக்களுக்கு மாமனார், மைத்துனர், மாமியார், ஆசாரியன், மனைவிகள் ஆகியோர் வேண்டுமளவு இருப்பார்கள். மேலும் ஜனங்கள் தாய் தந்தையரிடத்தில் அன்பில்லாதவர்களாய், மாமியார் மாமனார்களையே முக்கியமாக நினைத்து, “தாய் யார்? தகப்பன் யார்? யாருக்கு யார் என்ன? அவனவன் அவனவன் கர்மத்தையல்லவோ செய்யவேண்டும்!” என்று பேசி வருவார்கள்.
இந்தக் கலியுகத்தில் மக்கள் அற்ப புத்தியுடனும் மனம், வாக்கு, கர்மம் ஆகிய மூன்றும் சுத்தமில்லாமல் தினந்தோறும் பாவத்தையே செய்து வருவார்கள். உண்மையில்லாதவர்களாகவும் சௌசம் இல்லாதவர்களாகவும் வெட்கமில்லாதவர்களாகவும், துக்கப்பட்டுத் தவிப்பார்கள். கலிபுருஷனின் இத்தகைய பலத்தினால் உலகமானது, வேதாத்யாயனம், யாகம், பிதுர் பூஜை, தேவபூஜை இவைகளினின்று, தருமத்தை ஒழியவும் ஒளியவும் செய்யும். இத்தகைய கலியுகத்தில் எவனாவது ஒருவன் அற்பமான தர்மத்திற்கு முயற்சி செய்வானாகில், அவன் க்ருத யுகத்தில், பெருந்தவஞ் செய்து எத்தகைய புண்ணியத்தை அடைவானோ, அவ்வளவு புண்ணியத்தை எளிதில் அடைவான்!”
Comments
Post a Comment