மந்திர ஸம்ஸ்காரம் - ரஹஸ்யத்ரயம்
மந்திர சம்ஸ்காரம் பஞ்ச ஸம்ஸ்காரத்தின் ஓர் அங்கம் ஆகும். இதில் ரஹஸ்யத்ரயம் என்று கொண்டாடப்படும் திருமந்திரம், த்வயம், சரமஸ்லோகம் ஆகியன அடக்கம். திருமந்த்ரத்திற்கு "மந்திர ராஜம்" என்ற பெயருண்டு.
திருமந்திரம்:
அஷ்டாக்ஷர (எட்டு எழுத்து உள்ளது) திருமந்திரம்:
“ஓம் நமோ நாராயணாய”
இதில், ஓம் என்ற சொல் தான் ப்ரணவம் எனப்படுவது. இதிலிருந்து தான் அனைத்தும் ஏற்பட்டது. ப்ரணவம் தான் நமக்கும் பரமாத்வான ஸ்ரீமன் நாராயணனுக்கும் உள்ள பந்தத்தை உணர்த்துவது. இம்மந்திரம் பத்ரிகாஸ்ரமத்தில் நாராயண ரிஷியால் நரனுக்கு உபதேசிக்கப்பட்டதாகும்.
ப்ரணவமான "ஓம்" என்பதைப் பிரித்தால் அ, உ, ம கிட்டும். இங்கு
அ - பரமாத்மா
உ - சேஷத்துவம் (தாஸ்யம், அடிமை செய்வது)
ம - ஜீவாத்மா
ஓம் - ஜீவாத்மா பரமாத்மாவுக்கே அடிமை செய்வது
"நமோ" என்பதைப் பிரித்தால் ந, மோ
ந - இல்லை
மோ - எனக்கு
நமோ - எனக்காக இல்லை (பகவானுக்காக என்று இருத்தல்)
"நாராயணாய" என்பதைப் பிரித்தால் நார + அயணம் என்று கிட்டும்.
இங்கு
நார - நீர்
அயணம் - இருப்பிடம்
நாராயணாய - நீரை இருப்பிடமாக கொண்டிருப்பவன் (பாற்கடலில் வசிப்பவன்).
ஆக, "பாற்கடலில் வசிக்கும் ஸ்ரீமன் நாராயணனுக்கே இந்த ஜீவாத்மா அடிமை" என்பதாக பொருள்படும்.
த்வயம்:
ஸ்ரீமன் நாராயண சரணௌ
சரணம் ப்ரபத்யே
ஸ்ரீமதே நாராயணாய நம:
இது ஸ்ரீமன் நாராயணன் ஸ்ரீவைகுண்டத்தில் பிராட்டிக்கு இந்த மந்திரத்தை உபதேசித்தருளினார். இதன் பொருளானது, ஸ்ரீலக்ஷ்மிநாதனான எம்பெருமானின் திருவடியையே உபாயமாகப் (எல்லாமாக) பற்றி, பிராட்டியின் சேர்த்தியிலே அவனுக்கு கைங்கர்யம் பண்ணவேணும் என்பதே ஆகும்.
சரம ஸ்லோகம்:
ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷ யிஷ்யாமி மாசுச
கீதையில் கீதாசார்யனான கண்ணனால் குருக்ஷேத்ரப் போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு உபதேசிக்கப் பட்ட மந்திரம் இதுவே. இதன் பொருள் "தான் செய்யும் தர்மங்கள், கடைபிடிக்கும் தர்மங்கள் மட்டுமே மோக்ஷத்திற்கு உபாயம் என்று எண்ணிக்கொண்டிருப்பதைக் கைவிட்டு, என் ஒருவனையே சித்தோபாயமாகப் (எல்லாமாக) பற்றிக்கொள், நான், உன்னை, என்னை அடைவதற்கு தடைக்கல்லாக இருக்கும் எல்லா பாபங்களிருந்தும் விடுவிக்கிறேன், சோகப்படாதே!" என்பதாகும்.
Comments
Post a Comment