விஷ்ணு புராணம்
கலியுக தர்மம்
(விஷ்ணு புராணத்தின் ஆறாவது அம்சமாக உள்ளது)
கேசித்வஜ - காண்டிக்ய விவாதம்
“நாம் முன்பு கூறியபடி, குணங்களும் விபூதிகளும் அவதார ஸ்வரூபமும் உள்ள பகவான், தத்துவம் உணர்த்தும் சாஸ்திரத்தினாலும் யோகத்தினாலும் வெளிப்படுத்தப்படுவான். இந்த இரண்டு ஞானமும்தான் அவனை அடைவதற்குச் சாதனமாகும், ஆகையால் சாஸ்திரங்களை நன்கு விசாரித்து, யோகத்தில் இறங்க வேண்டும். யோகத்தில் இறங்கிய பிறகு அந்த தத்வத்தை திடப்படுத்திக் கொள்ள வேண்டும். இத்தகைய யோகங்கள் இரண்டும் நன்றாய்ப் பரிமளித்தால் பரமாத்மா காணப்படுவான்.
அந்தப் பரமாத்மாவைக் காண்பதற்குச் சாஸ்திரம் ஒரு கண் யோகம் மற்றொரு உயர்ந்த கண். பரப்பிரஹ்மமானவன் இந்தக் கண்களால் காணக் கூடியவனே தவிர இந்த மாம்சங்களாலான கண்களால் காணக்கூடியவனல்லன்” என்று பராசரர் உரைக்க, மைத்ரேயர் அவரை நோக்கி, “பராசர மகரிஷியே! எல்லாவற்றிற்கும் ஆதாரமான பரமேஸ்வரனை அடியேன் எத்தகைய யோகநெறியினால் காணமுடியுமோ அதை அடியேனுக்குச்சொல்லியருள வேண்டும்!” என்று ப்ரார்திக்க, "மைத்ரேயரே! பூர்வத்தில் காண்டிக்ய ஜனகருக்கு கேசித்வஜன் உபதேசித்தாற்போல், அந்த யோகரகஸ்யத்தை அடியேன் உமக்கு உபதேசிக்கிறோம்" என்றார் பராசர மகரிஷி.
''முனிவரே! காண்டிக்கியர் என்பவர் யார்? கேசித்வஜன் என்பவர் யார்? யோகத்தைப் பற்றி எப்படி அவர்களிடையே ஸம்வாதம் நேர்ந்தது? அதைத் தாங்கள் கிருபை கூர்ந்து எனக்குச் சொல்லியருள வேண்டும்என்று கேட்க, பராசரர் சொல்லத் துவங்கினார்.
"தர்மத்வஜர் என்கிற ஜனக மகாராஜா இருந்தார். மிதத்வஜர் என்றும் க்ருதத்வஜர் என்றும் குமாரர்கள் இருந்தார்கள். க்ருதத்வஜர் என்பவர் எப்பொழுதும் விசாரணை செய்து கொண்டிருப்பார். அவருக்குக் கேசித்வஜர் என்கிற புகழ்பெற்ற மைந்தர் பிறந்தார். மிதத்வஜருக்கும் காண்டிக்கியஜனகர் என்ற புத்திரர் பிறந்தார். அந்தக் காண்டிக்கியர் கர்மமார்க்கத்தில் பூமியை ஆண்டு வந்தார். கேசித்துவஜரோ, ஆத்மவித்தையில் வேர்ஊன்றியவராய் ராஜ்ய பரிபாலனஞ் செய்து வந்தார்.
இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் ஜெயிக்க முற்பட்டு, கேசித்வஜர் காண்டிக்கியரை ராஜ்யத்திலிருந்து விரட்டி விட, காண்டிக்கியர் அற்பமான படையையுடையவராக இருந்ததால், அரசாள்வதை விட்டு விட்டுத் தம்முடைய அமைச்சர், புரோகிதர் ஆகியோருடன் பிறர் வரக்கூடாத ஒரு காட்டில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார்.
கேசித்துவஜரோ ஞானத்தைப் பற்றியவராய் ப்ரம்ம வித்தையில் இருந்துகொண்டே, உபாசனைக்கு இடையூறு செய்யும் பாவங்களைப் போக்குவதற்காகப் பல யாகங்களை செய்து வந்தார். அவ்வாறு அவர் யாகஞ் செய்து கொண்டிருக்கும்போது, ஒருநாள் ப்ரவர்க்யம் என்ற கிரியையில், அவிசுக்கு அவசியமான பாலைக்கொடுத்து வந்த அவரது பசுவை காட்டில் ஒரு புலி அடித்துக் கொன்றுவிட்டது. அதை அந்த அரசர் கேள்விப்பட்டு, “இதற்குப் ப்ராயச்சித்தம் என்ன?” என்று ரித்துவிக்குகளைக் கேட்க, அவர்களோ, "எங்களுக்குத் தெரியாது! கசேருவைக் கேளுங்கள்!" என்ன, கசேரு, "பார்க்கவரைக் கேளுங்கள்" என்றுரைக்க, பார்கவரோ, “எனக்குத் தெரியாது, சுனகரைக் கேளுங்கள்!" என்றார். சுனகரை அரசர் கேட்க, “அரசே! இந்தக் கேள்விக்கான பதில் கசேருக்கோ எனக்கோ இந்தப் பூமியிலுள்ள மற்றொருவருக்குமோ தெரியாது. ஆனால் உன்னால் ஜயிக்கப்பட்டு உனக்குப் பகைவராக இருக்கும் காண்டிக்கிய ஜனகருக்குத்தான் இந்த விஷயம் தெரியும்!" என்றார்.
அதைக்கேட்ட அரசன், "முனிவரே! நான் இதைத் தெரிந்து கொள்வதற்காகவே, என் பகைவனிடம் செல்கிறேன். அவர் என்னைக் கொல்வாராயின் யாகபலன் எனக்குச்சித்திக்கும், இல்லை என்றால், பதில் மூலம் யாகம் குறைவில்லாமல் நிறைவேற்றப்படும்" என்று சொல்லி, கிருஷ்ணாஜினம் (மான் தோல்) தரித்தபடி, ரதத்தில் ஏறி, காண்டிக்கியர் இருக்கும் இடத்திற்குச் சென்றார். காண்டிக்கியரோ, தம் பகைவர் தம்மைத் தேடி வருவதைக்கண்டு, கோபத்தால் கண்கள் நெருப்பைப் போல சிவக்க, தம் வில்லில் நாணேற்றிக் கொண்டு, கேசித்வஜரை நோக்கி, "நீ கிருஷ்ணாஜின கவசத்தை அணிந்துகொண்டு யோக்கியனைப் போல் இங்கு வந்து என்னைக் கொல்லப் பார்க்கிறாய்! நாம் கிருஷ்ணாஜினம் தரித்திருப்பதால் நம்மை அவன் கொல்லமாட்டான்" என்று நீ எண்ணிவிட்டாய்.
"மூடா! மான்களின் உடலில் இந்தக் கிருஷ்ணாஜின கவசம் இல்லையோ? அத்தகைய மான்களை நீயும் நானும் எத்தனை எத்தனை அம்புகளை எய்து கொன்றிருக்கிறோம்? ஆகையால் உன்னைப் போன்றவனை அடிக்க இந்தக் கிருஷ்ணாஜினம் தடையாகாது. நீ என் ராஜ்யத்தைக் கைப்பற்றிய பகைவன்! ஆகையால் நீ யாகத்தில் இருந்தாலும் உன்னைக் கொல்வேன். என்னிடமிருந்து நீ உயிரோடு திரும்பமாட்டாய்!" என்றார்.
அதற்க்கு, கேசித்துவஜர், அமைதியான குரலில் "காண்டிக்கியரே! அடியேன் இப்போது உம்மிடம் ஒரு தர்மசந்தேகம் கேட்க வந்துள்ளேன், உம்மைக் கொல்வதற்காக வரவில்லை. அதனால் உமது கோபத்தை விட்டுவிடும், அல்லது என்மீது உமது பாணத்தை விட்டுவிடும்!' என்றார். அதைக் கேட்டு காண்டிக்கியரின் அமைச்சர், புரோகிதர் முதலானோர், “சத்ரு அருகில் வந்தவுடன் அவனைக்கொல்ல வேண்டும். அந்தப் பகைவன் அழிந்தால், இந்தப் பூமி முழுவதும் நமதுவசம் ஆகும்" என்க, அவர்கள் சொன்னதைக் கேட்ட காண்டிக்கியர், அவர்களைப் பார்த்து, “நீங்கள் சொல்வது சரிதான் பகைவனைக் கொன்றால் பூமி நமக்குச் ஸ்வாதீனமாகும். அவனைக் கொல்லாவிட்டாலோ நமக்கு மேல் உலகம் ஸ்வாதீனப்படும். அவனுக்கு பூமி கைவசத்தில் இருக்கும். இந்த உலக வெற்றியைவிட மேலுலக வெற்றியே சிறப்புடையது என்று நான் நினைக்கிறேன்.
ஏனென்றால் இந்த உலக வாழ்க்கை சிறிது காலம்தான். மேலுலக வாழ்வோ நீடித்திருப்பது. ஆகையால் என்பகைவனை நான் கொல்லாமல், அவன் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்வதே சிறப்பாகும்!" என்று, கேசித்துவஜரை வரவேற்று, "நீர் கேட்க வேண்டிய கேள்வியைக் கேளும். எனக்குத் தெரிந்தவரை நான் உமக்கு சொல்கிறேன்" என்க, கேசித்வஜர், யாகத்திற்கு உபயோகமான பாலைத்தருகின்ற பசு இறந்த செய்தியைச் சொல்லி, அதற்குரிய ப்ராயச்சித்தத்தை வேண்ட, காண்டிக்கியரும், சாஸ்திர விதிப்படியான ப்ராயச்சித்தத்தைக் கூற, தமது சந்தேகம் தீர்ந்தவுடன் கேசித்துவஜர் காண்டிக்கியரிடம் விடைபெற்று, யாகசாலைக்குச் சென்று விதிப்படிக் கிரியைகளைச் செய்து, யாகத்தை நிறைவேற்றி, அவப்ரத ஸ்நானம் செய்து யாகபூர்த்தி செய்தார்.
பின்பு, "நாம், நமது யாகத்துக்கு வந்த பிராமணரையெல்லாம் பூஜித்தோம். ரித்விக்குகளுக்குச் சன்மானமளித்தோம். யாசகர்களுக்குத் தானம் செய்தோம். இப்படி உலகத்துக்கு ஒப்புரவான காரியத்தை நாம் தக்கபடி செய்திருந்தும் நம்முடைய மனம் ஏன் செய்ய வேண்டியதைச் செய்யாததைப் போல் குறை கொண்டிருக்கிறது? என்று சிந்தித்தார். பிறகு "ஒஹோ! நாம் எல்லாம் செய்தும், நமக்கு ப்ராயச்சித்தத்தை உபதேசித்த காண்டிக்கியருக்குக் குருதக்ஷிணையை கொடுக்கவில்லை அல்லவா?” என்று நினைத்துக் கொண்டு, கேசித்துவஜர் மீண்டும் தமது தேரில் ஏறி, காண்டிக்கியர் வசிக்கும் காட்டிற்குச் சென்றார்.
மறுபடியும் தம்முடைய பகைவன், எதிரில் வருவதைக் கண்டதும் காண்டிக்கியர் தம்முடைய ஆயுதத்தைக் கையில் ஏந்தி நின்றார். அதைக் கண்டதும் கேசித்துவஜர், காண்டிக்கியரை நோக்கி, "ஓ! மகானுபாவரே! நான் உமக்குத் தீங்கு செய்ய இங்கு வரவில்லை. கோபிக்க வேண்டாம். உமக்குக் குருதக்ஷக்ஷிணை கொடுக்கவே வந்தேன்" என்றார்.
அதனால் காண்டிக்கிய ஜனகர், மறுபடியும் தமது அமைச்சரிடம், "எதைக் கேட்கலாம்?", என்று ஆலோசித்தார். அதற்கு அமைச்சர், “அவனது ராஜ்யம் முழுவதையும் உமக்குக் குருதட்சணையாகக் கொடுத்துவிடும்படி கேளும். புத்திசாலிகள் சமயம் வாய்த்தபோது தம்முடைய சேனைகளுக்குத் துன்பமில்லாமல் ராஜ்யத்தைச் சம்பாதிப்பார்கள்!' என்றார்.
ஆனால் காண்டிக்கியர் சிரித்துக்கொண்டே, “அமைச்சரே! சிறிது காலமே நிற்கத்தக்க இராஜ்யத்தையா என்னைப் போன்றோர் விரும்புவார்கள்? நீங்கள் அனைவரும் பொருளைச் சம்பாதிக்கும் அமைச்சர்கள் அல்லவா? இந்தச் ஸம்சாரத்திலே பரமார்த்தம் ஏது? அது எப்படிக் கிடைக்கும் என்ற விஷயத்தில் நீங்கள் ஒன்றுமே அறியாதவர்கள்! ஆகையால் நீங்கள் சொன்னது சரிதான்!” என்று அவர்களிடம் சொல்லிவிட்டுக் கேசித்துவஜரிடம் வந்து, “நீர் அவசியம் குரு தக்ஷிணை கொடுக்கத்தான் வேண்டும் என்று நினைக்கிறீரா?” என்றார். அதற்கு அவர் “ஆம்” என்றவுடன், அவரைப் பார்த்து அப்படியானால் நீர்ஆத்ம ஞானவித்தையில் தேறியவராகையால் எனக்கு நீர் குருதக்ஷிணையாக சம்சாரக்லேசம் போகத் தக்கதான அந்த ஞானத்தைச் சொல்லவேண்டும்!' என்றார்.
Comments
Post a Comment