Skip to main content

விஷ்ணு புராணம் - 2 - கலியின் குணம்

கலியுக தர்மம் 

(விஷ்ணு புராணத்தின் ஆறாவது அம்சமாக உள்ளது)

கலியின் குணம்


மைத்ரேயரே! மாபெரும் அறிஞரான வேத வியாசரும் கலிபுருஷன் விஷயத்தில் ஒரு விசேஷத்தைச் சொல்லியிருக்கிறார். அதையும் நாம் உமக்குச் சொல்கிறோம். ஒரு காலத்தில் தவமுனிவர்களிடையே ஒரு புண்ணிய வாதம் உண்டாயிற்று. அதாவது “கொஞ்சம் தருமம் செய்தாலும் பயன் அதிகமாகக் கிடைக்கும் காலம் எது? எவர் அத்தகைய தருமத்தை எளிதில் செய்வதற்கு உரியவர்கள்?” என்பதே அவர்களது விவாதமாகிவிட்டது. எனவே இந்த தர்மத்தைப் பற்றிய தெளிவு பெற, உண்மையை அறிந்து கொள்ள, முனிவர்கள் அனைவரும் வேதவ்யாச மகரிஷியின் ஆஸ்ரமத்தை நோக்கிச் சென்றார்கள். அப்போது என் மகனான வேதவ்யாசர், கங்கை நதியிலே நீராடிக் கொண்டிருந்தார். அதனால் அந்த முனிவர்கள் அவர் நீராடிவிட்டு வரும் வரையில் கரையோரமாக இருந்த மரங்களின் நிழல்களில் உட்கார்ந்திருந்தனர். 

அப்போது கங்கா தீர்த்தத்தில் மூழ்கிக் குளித்துக் கொண்டிருந்த என் குமாரர், முழுக்கிலிருந்து எழுந்து “சூத்திரன் ஸாது; கலி ஸாது” என்று முனிவர்களின் காதுகளில் கேட்கும்படிச் சொல்லிவிட்டு மீண்டும் நீரில் மூழ்கினார். பிறகு அவர் எழுந்து, “ஸாது ஸாது சூத்திரா! நீ மஹா புண்ணியவானாக இருக்கிறாய்?'' என்று சொன்னார். மறுபடியும் மூழ்கியெழுந்த அவ்வியாச முனிவர், “பெண்களே புண்ணியவதிகள்! அவர்களைவிடப் புண்ணியமுடையவர்கள் யார் இருக்கிறார்கள்?" என்று சொன்னார். பிறகு அவர் நன்றாக மூழ்கிக் குளித்து நீராடி விட்டு ஸகல அனுஷ்டானங்களையும் முடித்துவிட்டு ஆசனத்தில் வீற்றிருக்கும்போது சந்தேகம் தெளிவுபெற தேடிவந்த முனிவர்கள், வேத வியாசரை வணங்கி, நின்றனர்.

அவர்களை வேதவ்யாசர் உட்காரச் சொல்லி “நீங்கள் இங்கு எதற்காக வந்தீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள் ‘சுவாமீ! நாங்கள் ஒரு சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளவே, தேவரீரை தேடி வந்தோம். ஆனால் அதற்கு முன்பு, “கலி ஸாது, சூத்திரன் ஸாது; பெண்கள் புண்ணியவதிகள்” என்று சொல்லிக்கொண்டே நீரில் மூழ்கி எழுந்தீர்களே? அதைப் பற்றி நாங்கள் முதலில் தெரிந்துகொள்ள விரும்புகிறோம்!

மறைக்கவேண்டாத பக்ஷத்தில் அதை அடியோங்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். பிறகு நாங்கள் எண்ணி வந்ததைப் பற்றித் தங்களைக் கேட்டுத் தெளிவு கொள்கிறோம்" என்றார்கள். வேத வியாசர் புன்னகை செய்தவண்ணம் அவர்களுக்குக்கூறலானார்: “ஓ! தவ ஸ்ரேஷ்டர்களே! "ஸாது: ஸாது” என்று எதனால் சொன்னேனோ, அதைச் சொல்கிறேன் கேளுங்கள். எந்தப் புண்ணியத்தைக் க்ருதயுகத்திலே செய்தால் அது பத்து ஆண்டுகளில் சித்திக்குமோ, அதுவே த்ரேதாயுகத்தில் செய்தால் ஒரே ஆண்டில் சித்திக்கும்.

அதுவே துவாபரயுகத்தில் ஒரு மாதத்தில் சித்திக்கும். கலியுகத்திலோ ஒரே நாளில் சித்தித்துவிடும். இது போலவே தவம், ப்ரம்மசர்யம், ஜபம், முதலிய அனைத்திற்கும் உரிய பலனை மனிதன் மூன்று யுகங்களிலும் பெறுவதைக்காட்டிலும் மிகவும் எளிதாகப் பெறுவதாலேயே, “கலி ஸாது” என்று சொன்னேன். அதேபோல் கிருத யுகத்தில் யோக நிஷ்டையிலிருந்து தியானம் செய்வதனாலும் த்ரேதாயுகத்தில் யாகம் செய்வதனாலும், துவாபரயுகத்தில் அர்ச்சிப்பதனாலும் எந்தப் பயன் உண்டாகுமோ, அது கலியுகத்தில் ஸ்ரீகேசவனுடைய நாம சங்கீர்த்தனம் செய்வதாலேயே கிடைத்துவிடும்.

தருமம் அறிந்த தவத்தோரே! மனிதன், இந்தக் கலியுகத்தில் சிறிதளவு ஸ்ரமத்தினாலேயே பெரும் அளவு தருமத்தை அடைவான் அதனால், கலியை நான் கொண்டாடுகிறேன். ப்ராமணாதிகள் விரத அனுஷ்டானங்களில் தவறாமல் இருந்துகொண்டு, தனது முதல் கடமையாக வேதங்களை ஓதவேண்டும். பிறகு தரும வழியால் சம்பாதித்த பொருளைக் கொண்டு, யாகங்களை விதிப்படிச் செய்யவேண்டும். 

ப்ராமணாதியருக்குப் பகவானைப் பற்றிய பேச்சுக்களைத் தவிர, வீணாக பேசுவதும், எம்பெருமானுக்குச் சமர்ப்பிக்காத அன்னாதிகளைப் புசிப்பதும், விளம்பரத்திற்காகவும் ஆடம்பரத்திற்காகவும்  லாபத்துக்கும் யாகங்களைச் செய்வதும் பாதகமாகும். ஆகையால் அவர்கள் எப்போதும் மனம், வாக்கு, காயங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். மேலும் இரு பிறப்பாளருக்கு போஜனாதிகளைக்கூட இஷ்டப்படி செய்யவொண்ணாமல் விதிப்படி செய்யவேண்டியவையாக இருப்பதால், அனைத்துமே அவர்களுக்கு பராதீனமானவை. 

அதனால் அவர்கள் அனைத்தையும் மிகவும் வருந்தித்தான் தாங்களடைய வேண்டிய உலகங்களை ஜெயிக்க வேண்டும். சூத்திரனோ வேத அத்யயனம், அக்னியக்ஞம் முதலியவைகளின்றி, பாகயக்ஞாதிகாரமுடையவனாய் பிராமணாதியருக்குப் பணிவிடை செய்வதனாலேயே அத்தகைய முந்திய உத்தம உலகங்களை அடைந்துவிட முடிகிறது. ஆகையால் அவனைவிட புண்ணியவான் யார் உண்டு? சூத்திரனுக்கு இன்னது உண்ணத் தக்கது, இது உண்ணத்தகாதது, இது குடிக்கத்தக்கது, இது குடிக்கத் தகாதது என்ற நியமம் இல்லாமையால், "சூத்திரன் ஸாது” என்று நான் சொன்னேன்.

ஆடவர்கள் தாங்கள் தமக்குரிய தருமத்தினால் பொருள் சம்பாதிக்க வேண்டும். சம்பாதித்த பொருளை நல்லவைகளுக்குச் செலவு செய்ய வேண்டும். நல்லவர்களுக்குச் செலவு செய்ய வேண்டும். இவ்விதமாகப் பொருளை ஈட்டுவதிலும் அதைக் காப்பதிலும் எத்தனை பிரயாசைகள் இருக்கின்றன பாருங்கள். இதை நல்ல வழியில் செலவழிப்பதிலோ, இரட்டிப்புச் சிரமம் இருக்கிறது. இவ்விதமான பலவகைக் கிலேசங்களினால் ஆடவர்கள், பிரஜாபத்தியம் முதலிய உலகங்களை வெல்கிறார்கள். பெண்களோ மனோவாக்குக் காயங்களினாலே தம் கணவர்களுக்கு அநுகூலமாக இருந்துகொண்டு சிசுருஷைகளைச் செய்து வந்தாலே, கணவன் அடையும் உலகங்களை எளிதில் அடைந்து விடுகிறார்கள்.

இவ்விதம் அதிகச் சிரமம் இல்லாமல் வருந்திப் பெறும் உலகங்களை சுலபமாக பெறுவதால், மூன்றாவதாகப் “பெண்கள் ஸாதுக்கள்” என்றேன். பிராமண உத்தமர்களே! நீங்கள் கேட்டதற்கான தெளிவை சொன்னேன். இனி நீங்கள் வந்த காரியத்தைச் சொல்லவேண்டும். அதற்கும் நான் பதில் சொல்கிறேன்”என்றார் வேதவ்யாசர். ''முனி ஸ்ரேஷ்டரே! நாங்கள் கேட்க வந்த சந்தேகங்கள் இப்போது நீங்கள் கூறிய விளக்கவுரைகளிலேயே அடங்கியுள்ளன.

இனி நாங்கள் கேட்க வேண்டியவை வேறில்லை" என்றார்கள் முனிவர்கள். பிறகு, அந்தக் கிருஷ்ணதுவைபாயனர் சிரித்து, “நான் திவ்யஞானத்தால், உங்கள் காரியத்தை அறிந்து, அதைக் குறித்துத்தான் கலி ஸாது, சூத்திரன் ஸாது, ஸ்திரீகள் ஸாதுக்கள் என்று சொன்னேன். அற்ப முயற்சியிலேயேகலியில் தருமம் பலிக்கிறது. கருணை, சாந்தி, முதலிய ஆன்மீக குணங்களாகிய தண்ணீர்களினால் அவர்கள் பாவங்களாகிய மலங்களைக் கழுவிக் கொள்கிறார்கள். 

சூத்திரர் ப்ராமணாதியருக்குப் பணிவிடை செய்வதினாலேயே பேறு பெறுகின்றனர். பெண்டிரும் கணவருக்குப் பணிவிடை செய்து, ஆயாசம் இல்லாமலேயே சுலபமாக நற்கதியை அடைகிறார்கள். ஆகையால் இந்த மூவரும் புண்ணியசாலிகள் என்பது அடியேனுடைய கருத்து. க்ருதயுகாதி காலங்களிலும், அந்தணர் முதலியோருக்குத் தர்மம் சம்பாதிப்பதில் பெரிய ஆயாசமுள்ளது. இதைப்பற்றி நான் பேசியதில் உங்கள் சந்தேகம் தீர்ந்தது அல்லவா? இனி நான் ங்களுக்குச் செய்யவேண்டுவது என்ன?” என்று கேட்க, அவர்கள் சந்தேகம் நீங்கிய மகிழ்ச்சியோடு அவரை வணங்கி, விடைபெற்றுச் சென்றார்கள்.

மைத்ரேயரே! இந்த இரகசியத்தை நான் உமக்குச் சொன்னேன். மிகவும் துஷ்டனான கலிபுருஷனுக்கு இத்தகைய பெருங்குணமும் இருக்கிறது. நீங்கள் முதலில் லோக சம்ஹாரத்தைப் பற்றி என்னைக் கேட்டீரல்லவா? ப்ராகிருதம், அவாந்தரம் என்று பிரிந்திருக்கிற அந்தப் பிரளயக் கிரமத்தை இனி உமக்குச் சொல்கிறேன் கேளும்.

நைமித்திகப் பிரளயம்

எல்லா பூதங்களுக்கும் ப்ரளயம் மூன்று விதம் ஆகும். அவை நைமித்திகம், பிராக்ருதம், ஆத்யந்திகம் என்பனவாம். கல்பத்தின் முடிவில் பிரம்மாவால் உண்டாகும் ப்ரளயம் நைமித்திகம். பரம் பொருள் பிரமாணமான ப்ரம்மாவினுடைய ஆயுளின் முடிவில் வரும் பிரளயம் ப்ராகிருதம். மோக்ஷமே ஆத்யந்திகம் எனப்படும்” என்று பராசர முனிவர் கூறியதும் மைத்ரேயர், "ஸ்வாமி! ப்ராக்ருதப் ப்ரளயத்தை அறிந்து கொள்வதற்காக பரார்த்தத்தை இரட்டிக்க வேண்டும் என்பார்கள், அந்தப் பரார்த்தம் என்ற கணக்கை அடியேனுக்குத் தெரிவிக்க வேண்டும்" என்றார்.

பராசர மகரிஷி கூறலானார்: ''கேளும் ப்ராம்மணரே! முதல் ஸ்தானம் தொடங்கி ஒன்றுக்கு ஒன்று பதின்மடங்கு அதிகமாய் மேலுக்கு மேல் ஸ்தானங்கள் உண்டன்றோ? அவற்றில் பதினெட்டாவது இடமே பரார்த்தம் என்று வழங்கப்படுகிறது. அந்தப் பரார்த்தம் இரட்டித்த காலத்தில் ப்ராகிருதப் பிரளயம் உண்டாகும். இப்பொழுது வியக்தம் யாவும் அவ்யக்கத்தில் லயப்பட்டு விடும்.

காலம்

மனிதருக்கு நிமிஷம் என்று எதுவுண்டோ, அது ஒரு மாத்திரை அளவுள்ளது. ஆகையால் அது மாத்திரை என்று சொல்லப்படும். அந்த மாத்திரைகள் பதினைந்து கொண்டது ஒரு காஷ்டை. முப்பது காஷ்டைகள் ஒரு கலை. பதினைந்து கலைகள் ஒரு நாழிகை. அந்த நாழிகைப் பன்னிரண்டரை, பல நிறையுள்ள தண்ணீரால் குறிக்கப்படும்.

இது மகத தேசத்தில் (மகததேசம் காசிக்கு தெற்கில் யமுனையும், கங்கையும் கூடும் பிரயாகை என்னும் இடத்தில் கிழக்கில் கயா, தெற்கில் சித்திரகூட மலை வரை பரவி இருந்த தேசம்) ஒரு படி நீரளவாம். இதை அறியும் முறையைக் கேளும். இருபது குன்றிமணி எடையுள்ள பொன்னால் நான்கு அங்குல அளவாகச் செய்த ஊசிகளைக் கொண்டு துளையிடப்பட்ட மகத தேசத்துப் படியளவான ஒரு பாத்திரத்தைத் தண்ணீரில் மூழ்த்தினால், அந்தப் பாத்திரம் எவ்வளவு காலத்தில் தண்ணீரால் நிறையுமோ அத்தனை ஒரு நாழிகை என்று எண்ணப்படும். 

அல்லது, அந்தப் பாத்திரத்தில் விட்ட தண்ணீர் அதிலிருந்து வெளிப்படும் காலம் ஒரு நாழிகையாகும். இரண்டு நாழிகை ஒரு முகூர்த்தம். முப்பது முகூர்த்தம் ஒரு நாள். முப்பது நாள் ஒரு மாதம். பன்னிரண்டு மாதம் ஒரு வருடம். இந்த வருஷம் தேவர்களுக்கு ஒரு இராப்பகல்! இத்தகைய இராப்பகல்கள் முந்நூற்றறுபது சேர, தேவமானத்தில் ஒரு வருஷமாம். அந்த வருஷம் பன்னீராயிரம் சேர்ந்தால் ஒரு சதுர்யுகமாகும். அந்தச் சதுர்யுகங்கள் ஆயிரம் ஆயின் சதுர்முகனுக்கு ஒரு தினமமாம்.

அதற்குத்தான் கல்பம் என்று பெயர். அதன் இறுதியில் வருவதுதான் ப்ரம்மசம்பந்தமான நைமித்திகப் பிரளயமாகும். மைத்ரேயரே! அதி உக்கிரமான அந்தப் பிரளயத்தின் சொரூபத்தை முன்னதாகச் சொல்லுகிறேன். பிறகு நைமித்திக பிரளயத்தைப் பற்றிச் சொல்கிறேன். ஆயிரம் சதுர்யுகத்தின் முடிவில் பஞ்சம் முதலிய காரணங்களாலே, பூலோகம், பெரும்பாலும் பாதித்திருக்கும் போது, மிகவும் கொடுமையாய் நூற்றாண்டு அளவு மழையே இல்லாமல் இருக்கும். அதனால் அற்பசக்தியுள்ள ஜந்துக்கள் யாவும் மடிந்துபோய்விடும். 

அப்போது பகவான் ஸ்ரீவிஷ்ணு சம்காரத்துக்காக ருத்திர ரூபம் தரித்தவராய் சகல பிராணிகளையும் தம்மில் லயிக்கும்படி செய்யும் திருவுளம் பற்றிச் சூரியனது ஏழு கிரணங்களிலிருந்து கொண்டு சகல ஜலங்களையும் பானம் செய்வார். இவ்விதமாகப் பிராணிகளிலும் பூமியிலும் உள்ள தண்ணீரையெல்லாம் உறிஞ்சிப் பூமியெல்லாம் வற்றச் செய்வார்.

இவ்வாறு அருவிகள், நதிகள், சமுத்திரங்கள் முதலியவற்றின் தண்ணீரையெல்லாம் அருந்தியதால் சூரிய கிரணங்கள் ஏழும் மிகவும் பெரிதாகி, ஏழு சூரியர்களாகிக் கீழும் மேலும் ஜொலித்துப் பாதாளங்கள் உட்பட மூன்று உலகங்களையும் எரித்துவிடும். இந்த ஏழு சூரியர்களாலும் எரிக்கப்படவே, இந்தப் பூமியானது மலைகள் கடல்கள் முதலிய எவ்விடத்திலும் ஈரப் பசையென்பதேயில்லாமல் மரஞ்செடி, புல்பூண்டு முதலிய யாவும் எரிந்து போய் ஆமையோடு போலாகிவிடும். 

பிறகு ஆதிசேஷனின் ஸ்வாசத்திலிருந்து உண்டான காலாக்கினியானது ருத்ரனாகிப் பாதாளங்களை எல்லாம் தகித்துக் கொண்டே, பூமிக்கும் வந்து அதையும் கொளுத்திவிடும். இவ்விதமாக அந்தப் பிரளய காலாக்கினி ஜ்வாலா சக்கரத்தோடு கூடியதாய் புவர்லோக, சுவர்லோகங்களையும் கொளுத்திக்கொண்டே, அங்கேயே சுழன்று கொண்டேயிருக்கும். அப்போது அதன் ஜ்வாலைகளால் சூழப்பட்ட மூவுலகமும் சராசரங்கள் நசித்ததாய் வறுக்கிற இரும்புப்பாத்திரத்தை போல இருக்கும்.

பிறகு அதிகார புருஷர்களாய், புவர்லோக சுவர்லோகங்களில் இருக்கிற மனுவாதிகள் மகாதாபத்தோடு மகர்லோகம் செல்வார்கள். பிறகு அங்கும் பெருந்தாபமடைந்து அவ்வுலகத்தாருடன் கூட, அதற்கும் மேலான ஜனலோகத்தை அடைவார்கள். அவர்களுக்குள்ளே யார் பரப்பிரம்மத்தையடைய நின்றவர்களோ, அவர்கள் மாத்திரம் மேலும் கீழும் பத்துத் தரம் சுற்றிச் சுழன்று தபலோக சத்தியலோகங்களிற்சென்று கடைசியாகப் பரப்பிரம்மத்தை அடைவார்கள். பூவுலகம் முதலிய மூவுலகங்களிலுமுள்ள மற்றவர் யாவரும் ஆன்மாவில் லயப்படுவார்கள். 

இவ்விதமாக ருத்திர ரூபியாக இருக்கிற ஸ்ரீஜனார்த்தனர் யாவற்றையும் தகித்து, தம் சுவாசத்தினின்றும் அநேக மேகங்களை உண்டாக்குவார். அதனால் யானைகளின் கூட்டத்தைப் போன்று மகாபயங்கரமான இடி மின்னல்களுடன் கூடிய ப்ரளயகால மேகங்கள் குவியலாகும். அவற்றில் சில கருநெய்தல் மலர் போன்றும், சில ஆம்பலைப் போன்றும், சில கருஞ்சிவப்பாகவும், சில பொன்னிறமாயும், சில கழுதை நிறமாயும், சில அரக்கு வர்ணமாயும், சில வைடூர்யம் போன்றும்; சில இந்திர நீலத்துக்கு ஒப்பாயும், சில சங்கு முல்லை போலவும் சில மை நிறமாயும், சில தம்பலப் பூச்சிகள் போன்றும், வேறு சில நெருப்புப் போன்றும், சில மனோசிலை போன்றும் சில கூந்தற்பனை போன்றும் விளங்கும். 

அத்தகைய மாபெரும் மேகங்களின் உருவங்களில் சில பெரிய நகரங்களைப் போலவும், சில மலைகளைப் போலவும், சில தரைக்குச் சமானமாயும் இருக்கும். இத்தகைய மகாமேகங்கள் பயங்கரமாக முழங்கிக் கொண்டு வானம் முழுதும் பரவி பெருந்தாரைகளைப் பொழிந்த வண்ணம் முன்பு சொன்னதுபோல், மூன்று உலகங்களிலும் பற்றி எரிகின்ற பெருந்தீயை அவிக்கும் அந்தத் தீயானது அவிந்த பிறகும் அம்மேகங்கள் இராப் பகல்கள் ஓயாமல் மழையைப் பொழிந்து அந்தப் பெருந்தாரைகளினாலே பூமி முழுவதையும் ஜலமயமாக்கிப் பின்பு புவர்லோகத்தையும் அப்படியே ஜலமயமாக்கி விடும்.

இதுபோல் அப்பெருமேகங்கள் ஸ்தாவர ஜங்கமங்கள் யாவும் அற்று அந்தகாரஞ் சூழ்ந்த உலகில், ஒரு நூறு ஆண்டுகளுக்குப் பெருமழையை ஓயாமல் பொழிந்து கொண்டேயிருக்கும். ஓ மைத்ரேயரே! நித்தியனாகவும் பரமாத்மாவாகவும் இருக்கிற பகவான் ஸ்ரீவாசுதேவனுடைய மகிமையினால் கல்ப காலத்தின் முடிவில் இப்படியெல்லாம் நிகழ்கின்றன.

Comments

Popular posts from this blog

துருவ மஹாராஜருடைய வைபவம்-3

  துருவ மஹாராஜருடைய வைபவம் பிறகு, பலவித ஆயுதங்களுடன் அக்னிஜ்ஜவாலை வீசும் முகங்களையுடைய அரக்கர்கள் தோன்றி போர்க்கருவிகளையேந்தி கர்ஜனை செய்தார்கள். குபுகுபுவென்று அனலெழும்பும் முகமுடைய நரிகள் துருவனைச் சுற்றிக் கொண்டு அகோரமாக ஊளையிட்டன. சிங்கம், முதலை, ஒட்டகம் போன்ற முகங்களைக் கொண்ட நிசாசரர்கள் “இந்தப் பையனைக் குத்துங்கள்! கொல்லுங்கள்! தின்னுங்கள்!'' என்று பெருங்கூச்சலிட்டார்கள். துருவனோ கோவிந்தனின் சரணாரவிந்தங்களிலேயே தன் மனதைலயப்படுத்தியதால், அப்பூத கணங்களின் சப்தங்களும் அச்சுறுத்தல்களும் துருவனை ஒன்றும் செய்யமாட்டாமற்போயின.  அவன் அவற்றைக் கவனிக்காமல், ஸ்திரமான சித்தத்துடன் ஸ்ரீமந்நாராயணனே தன்னுள் எழுந்தருளியிருப்பதாகத் தியானித்துக் கொண்டு, மற்றொன்றும் அறியாமல் இருந்தான். இவ்விதமாகத் தேவர்கள் பிரயோகித்த மாயைகள் எல்லாம் நாசமடைந்தன. அதைக் கண்ட தேவதைகள் துருவ மகாத்மாவின் தபோ மகிமையினால் தங்களுக்கு என்ன அபாயம் நேரிடுமோ என்று பயந்து அந்தத் தவத்தை நிறுத்துவதற்கு உபாயந் தேட வேண்டும் என்று உறுதியாகத் துணிந்து, லோகாபிதாவான ஸ்ரீமந்நாராயணனைச் சரணடைந்து, “தேவ தேவனே! 'துருவனின் தவ மகி...

திருப்பாவை பாசுரம் 13 பதவுரை

பாசுரம்: புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லாவரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப் பிள்ளைக ளெல்லாரும் பாவைக் களம்புக்கார் வெள்ளி யெழுந்து வியாழ முறங்கிற்று புள்ளுஞ் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்! குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே பள்ளிக் கிடத்தியோ பாவாய்நீ நன்னாளால் கள்ளந் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய். பதவுரை: புள்ளின் வாய் கீண்டானை- பறவையுருவங்கொண்டு வந்த பகாஸுரனுடைய வாயைக் கிழித்தெறிந்தவனும் பொல்லா அரக்கனை கிள்ளிகளைந்தானை-பொல்லாங்கு களுக்கு உறைவிடமான இராவணனை விளையாட்டாக அழித்தவனுமான எம்பிரானுடைய கீர்த்திமை பாடி போய்-வீரச்செயல்களைப் பாடிக்கொண்டு சென்று பிள்ளைகள் எல்லாரும் - எல்லாப் பெண்பிள்ளைகளும்  பாவைக்களம்- (க்ருஷ்ணனும் தாங்களும்) நோன்பு நோற்கைக்காகக் குறித்த இடத்திற்கு புக்கார்-புகுந்தனர் வெள்ளிஎழுந்து-சுக்கிரன் மேலெழுந்து வியாழம் உறங்கிற்று - குரு அஸ்தமித்தது (மேலும்,)  புள்ளும் சிலம்பின காண் - பறவைகளும் (இறைதேடக்) கூவிச்செல்கின்றன போது அரி கண்ணினாய்-பூவையும் மானையும் ஒத்துள்ள கண்ணையுடையவளே! பாவாய்- இயற்கையாகவே ஸ்த்ரீத்வத்தைப் பெற்றவளே! நீ -நீ நல்நாள் - கிரு...

உபதேச இரத்னமாலை - தனியன்: பதவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: *உபதேச இரத்னமாலை* - தனியன்:  பதவுரை *முன்னம்* - முற்காலத்தில்  *திருவாய்மொழிப்பிள்ளை* - திருவாய்மொழிப்பிள்ளை என்கிற ஆசார்யன்  *தாம் உபதேசித்த* - தாம் உகந்து உபதேசித்த ஆரணங்களையும் ஆழ்ந்த பொருளுடையவற்றையெல்லாம்  *நேர் தன்னின் படியை தணவாத சொல்* - சிறிதும் கூட்டாமலும் குறைக்காமலும் அப்படியே பேசுபவரான *மணவாளமுனி* - மணவாளமாமுனி *தன் அன்புடன் செய்* - தன்னுடைய அதீத அன்பினாலும் மிகுந்த ஈடுபாட்டாலும் உகந்தருளின  *உபதேசரத்னமாலை தன்னை* - உபதேசரத்னமாலை என்னும் அற்புத பிரபந்தத்தை  *தம் நெஞ்சு தன்னில்* - தன்னுடைய ஹ்ருதய கமலத்திலே *தரிப்பவர்* - ஆழ்ந்து ஈடுபட்டு பதிப்பவர்களுடைய  *தாள்கள் சரண் நமக்கே.* - திருவடிகளே நமக்கு தஞ்சம்.