கலியுக தர்மம்
(விஷ்ணு புராணத்தின் ஆறாவது அம்சமாக உள்ளது)
பிராகிருதப் ப்ரளயம்
"மைத்ரேயரே! இவ்விதமாகப் பெருமழை பொழிந்து அந்தத்தண்ணீர்ப் பெருக்கானது சப்தரிஷி மண்டலத்தையும் கவர்ந்து நிற்பதால் மூன்று உலகங்களும் ஏகார்ணவமாகிவிடும். அப்போது ஸ்ரீமகாவிஷ்ணுவின் திருமுகத்திலிருந்து ஒரு மூச்சுக் காற்று உண்டாகி, அந்தப் பெரிய மேகங்களையெல்லாம் நாசஞ் செய்து கொண்டு ஒரு நூற்றாண்டளவு வரை பெருங்காற்றாக வீசிக்கொண்டே இருக்கும்.
பின்னர் சர்வபூதமயனாகவும் நினைத்தற்கும் அரியனாயும் அனாதியாயும் பிரபஞ்சத்துக்கு ஆதியாயும் மகாப்பிரபுவாகவும் இருக்கும் ஸ்ரீஹரி பகவான் அந்தக் காற்றை அமுது செய்து ப்ரம்மரூபத்தோடு அந்த ஏகார்ணவத்தில், சேஷசயனத்தின் மீது ஜனலோகத்திலுள்ள சனக, சனந்தனர் முதலிய யோகிகளாலும், ப்ரம்மலோகத்திலுள்ள முமூட்சுக்களாலும்தியானிக்கப்பட்டவராய் தமது மாயா ஸ்வரூபமான யோகநித்திரையைக் கைக்கொண்டு ஸ்ரீவாசுதேவன் என்ற திருநாமமுடன் தம்மையே சிந்தித்தவண்ணம் திருக்கண்வளர்ந்தருள்வார்.
ஸ்ரீஹரி பகவான் இவ்வாறு ப்ரம்ம ரூபத்துடன் அந்தக் காலத்தில் துயில்கொள்ளும் காலம் நிமித்தமாக இருப்பதாலேயே, இவ்விதம் நடக்கும் பிரளயத்துக்கு நைமித்திகப் பிரளயம் என்று பெயர். ஸர்வாத்மாவான ஸ்ரீஅச்சுதன் எப்பொழுது திருக்கண்விழிப்பாரோ, அப்போதுதான் இந்த உலகமும் அசைவுபெறும். யோகநித்திரை புரிவாராயின், உலகமும் கண்மூடிப்போம். ஆயிரம் சதுர்யுகப் பிரமாணமுடைய ப்ரம்மதினம் எதுவோ; அவ்வளவு காலமே இரவுமாகும்.
இந்த இரவின் முடிவில் ஸ்ரீவிஷ்ணு துயில் நீங்கி விழித்துக் கொண்டு ப்ரம்மரூபத்தோடு மீண்டும் சிருஷ்டித்து அருளுகின்றான் என்று முன்பே நான் உமக்குச் சொன்னேன் அல்லவா? இந்தக் கல்பத்தின் முடிவில் செய்யும் ஸம்காரமே அவாந்தரப் பிரளயம். நைமித்திகப் ப்ரளயத்தைப் பற்றி உமக்குச் சொன்னேன். இனிப் ப்ராகிருதப் ப்ரளயத்தைப் பற்றிச் சொல்கிறேன்; கேளுங்கள்.
முன்பு நான் சொன்னதுபோல அனாவிருஷ்டி முதலியவைகளால், ஸகல உலகங்களும் பாதாளங்களும் நாசமாகி மகத் தத்துவம் முதல் விசேஷம் வரையில் உள்ள யாவும் நசிக்கும்படி, எம்பெருமானின் சங்கல்பத்தால் பிரளயம் சம்பவிக்க முதலாவதாக நீரானது நிலத்தின் குணமான கந்தத்தைக் கிரகிக்கிறது. கந்தம் கிரகிக்கப்பட்டவுடன்; நிலமானது லயப்படத் தக்கதாகி கந்த தன் மாத்திரை நசித்து நீராகி விடுகிறது. அந்த நீர் பெருகி மகாவேகமும் மிக முழக்கமுங்கொண்டு, எல்லாவற்றையும் நிரப்பிக் கொண்டு அலைகளுடைய பிரவாகத்தோடு, உலகங்களின் முடிவு வரையில் ஓடி நிற்கும்.
அந்தத் தண்ணீரின் குணமான ரசத்தைச் சோதியானது கிரகிக்கும்போது அத்தண்ணீர் ரசதன்மாத்திரையற்று, சோதியாகின்றது. இவ்விதமாக நீரானது நெருப்பாகி மகாதேஜஸ் சூழ்ந்ததாக எங்கும் நிறைந்து வியாபகமாகின்றது. இவ்விதமாக எத்திசையும் ஜ்வாலா மயமாய்ச் சூழ்ந்துள்ள அந்த அனலின் குணமாகிய ரூபத்தைக் காற்றானது கிரகித்துக் கொள்கின்றது. ரூபதன்மாத்திரை நசித்ததினால் அனல் அற்று, காற்று மிக அதிகமாக வீசத் துவங்கி ஒளி நீங்கி, காற்று மட்டும் பேரிரைச்சலுடன் வானத்தைப் பற்றி வீசிக் கொண்டிருக்க, அதன் குணமாகிய ஸ்பரிசத்தை வானமானது கிரகித்துக் கொள்கிறது.
பிறகு வாயுவானது நாசமாகி ஆகாயம் ஒன்றே ஆவரணமின்றி இருக்கும். ரூப, ரச, கந்த ஸ்பரிசங்கள் அற்றதாய் ஒலியையே இலக்கணமாகக் கொண்டதாய், அவயவமில்லாததாய் மிகப்பெரிதான அந்த ஆகாயமானது யாவையும் நிரப்பிக்கொண்டு நிற்கும். இவ்விதமாக, சுற்றிலும் வட்டமாய், யாவுங் கொள்ளும் இடமாய், எல்லாவற்றையும் சூழ்ந்துள்ள அந்த ஆகாயத்தின் குணமாகிய சப்தத்தைப் பூதாதிகள் கிரகிக்கின்றன.
பூதங்களும் இந்திரியங்களும் ஒருமிக்க அந்தப் பூதாதியில் லயமடையும் அபிமான ரூபமான இந்தப் பூதாதியானது தமஸ்ஸைப் பிரதானமாகக் கொண்டதனால் தாமசம் என்று வழங்கப்படுகிறது. இந்தப் பூதாதி என்று வழங்கப்பட்ட அகங்காரத்தைப் புத்தியையே லக்ஷணமாகக் கொண்ட மகத்தானது கிரஹிக்கின்றது. அந்த அண்டத்தினுள்ளே பூமியும் மகத்தும் முதல் எல்லையும் கடைசி எல்லையுமாக இருப்பது போலவே, வெளியிலும் முதலும் கடைசியும் எல்லையாகக் கொண்டுள்ளன.
இதுபோலவே அண்டத்துக்குப் புறத்தேயுள்ள ப்ருத்வி முதல் மகத் ஈறாகவுள்ள ஏழு ப்ரகிருதிகளும் சம்கார க்ரமத்திலே முன்பு உரைத்ததுபோல், தத்தமது காரணங்களிலே லயப்படுகின்றன. இந்தப் பிரபஞ்சத்தை மூடிக் கொண்டுள்ள அண்ட ரூபமான ப்ருதிவியானது அதைச் சூழ்ந்த அப்புவிலும் அந்த அப்பு அதைச் சூழ்ந்த தேஜசிலும், அந்தத் தேஜசு, அதைச் சூழ்ந்த வாயுவிலும், அந்த வாயு அதனைச் சூழ்ந்த ஆகாயத்திலும், அந்த ஆகாயம் அஹங்காரத்திலும், அந்த அஹங்காரம் மகத்திலும் லயமடைகின்றன.
இவற்றோடும் கூடிய அந்த மகத் தத்வத்தைப் ப்ரகிருதி கிரகிக்கின்றது. குறையாமலும் மிகாமலும் முக்குணங்கள் சமமாக இருப்பதுதான் ப்ரகிருதியாகும். அதுதான் உலகங்களுக்குப் பிரதானமும் காரணமும் ஆகிறது. இப்படியாக, இந்த ப்ரகிருதி வியக்த ஸ்வரூபமாயும் அவ்யக்த ஸ்வரூபமாகவும் இருக்கிறது. ஆகவே, வியக்தம் அவ்யக்தத்தில் லயப்படுகிறது என்றும் ஒருவகைப்பட்டவனாயும் இயல்பில் தீயோனாயும் அக்ஷரனாயும் நித்தியனாயும் சூஷ்ம ரூபியாகையால் ப்ரகிருதியையும் வியாபிக்கத்தக்க புருஷனும், ப்ரகிருதியைப் போல் பரமாத்மாவின் அம்சமாக இருக்கிறான்.
பரமாத்மாவோ, பெயர், இனம், மொழி, வர்ணம் முதலிய கற்பனைகள் இல்லாமல் எப்பொழுதும் இருப்பதையே இயல்பாகக் கொண்டவனாய், வேண்டியவனாய், ஸர்வேஸ்வரனாய், ஞானஸ்வரூபியாய் மேம்பட்டவனாக இருப்பவன். அத்தகைய ஸ்ரீமஹாவிஷ்ணுவே எல்லாமாக இருப்பவன். அவனே யோகியானவன். அவனைச் சேர்ந்தவை மீண்டும் திரும்புவதில்லை. வ்யக்தாவ்யக்த ப்ரகிருதி யாதுண்டோ, அதுவும் புருஷன் என்று சொல்லப்படும் ஜீவனும் அந்தப் பரமாத்மாவிலே லயப்படுகின்றன.
அந்தப் பரமாத்மாவே யாவற்றுக்கும் ஆதாரமான பரமேஸ்வரன். அவன் வேதத்திலும் வேதாந்தத்திலும் விஷ்ணு முதலிய பெயர்களில் துதிக்கப்பட்டிருக்கிறான். ப்ரவர்த்தி, நிவர்த்தி என்ற இருவகை வைதிக கர்மங்களினால் தேவதா வேதஸ்வரூபியான ஸ்ரீமகாவிஷ்ணுவே ரிக், யஜுர், சாமம் என்ற ப்ரவர்த்தி மார்க்கங்களிலே, யக்ஞேஸ்வரனாகவும் யக்ஞபுருஷனாயும் ஆராதிக்கப்படுகிறான். நிவர்த்தி மார்க்கத்தில் ஞானஸ்வரூபியாகவும் ஞானமயமான திருமேனியுடையவனாயுமுள்ள ஸ்ரீமகாவிஷ்ணுவே மோக்ஷத்தைக் கொடுக்க வல்லவனாக ஞானயக்ஞத்தால் யோகியரால் போற்றப்படுகிறான்.
குறில், நெடில், அளபெடை ஆகியவற்றால் சொல்லப்படும் அசித்து யாதோ அதுவும் வாக்குக்கு விஷயமாகாத சித்தும் அந்த ஸ்ரீவிஷ்ணுவின் சொரூபங்களேயாகும்! வ்யக்தமும் அவ்யக்தமும் புருஷனும் முக்தனும் யாவும் அந்த ஸ்ரீஹரி பகவான்தான்! சகல ப்ரபஞ்சத்தையும் தமக்குச் சரீரமாகக் கொண்டு விளங்குவதனால் அவை அவனுடைய சொரூபங்களேயாம்! அந்த ஸ்ரீஹரியிடத்தில் ப்ரதானமும் புருஷனும் ஒடுங்குகிறார்களல்லவா? அப்படியாக ஒடுங்குமிடமான அந்தப் பரமாத்மாவுக்கு இரண்டு பரார்த்த காலம் என்று சொன்னது ஒரு பகல்.
வியக்தமெல்லாம் ப்ரகிருதியிலும் அந்த ப்ரகிருதி புருஷனிடத்திலும் அந்தப் புருஷன் பரமாத்மாவிலும் லயமாக இருக்க, அதே அளவு காலம் இரவாம். ப்ராம்மணோத்தமரே! நித்யனான அந்தப் பரமாத்மாவுக்கு பகல் என்பதுமில்லை, இரவு என்பதுவுமில்லை. ஆயினும் சிருஷ்டி முதலிய காரியங்களைக் கொண்டு, உபசார வழக்கால் இரவு பகல்கள் சொல்லப்படுகின்றன. இவ்விதமாக ப்ராகிருத ப்ரளயத்தின் தர்மத்தைச் சொன்னேன். இனி, ஆத்யந்திகப் பிரளயத்தைப் பற்றிச் சொல்கிறேன்.
Comments
Post a Comment