ஸ்ரீமதே ஸடகோபாய நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ கூர நாராயண ஜீயர்
ஸ்ரீபராஸர பட்டார்ய சிஷ்யம் ஸ்ரீரங்க பாலகம்
நாராயண முநிம் வந்தே ஜ்ஞாநாதி குணஸாகரம்
ஞான பக்தி வைராக்யக் கடலுமான ஸ்ரீநாராயண முநியை வணங்குகிறேன்.)
ஸ்வாமி எம்பாரின் இளைய சகோதரர் சிறிய கோவிந்தப் பெருமாளின் குமாரராக ஸ்வாமி ஸ்ரீரங்கத்தில் மார்கழி கேட்டையில் திருவவதாரம் செய்தார். ஸ்வாமி கூரத்தாழ்வானிடமும் பின்பு ஸ்வாமி ஸ்ரீ பராசர பட்டரிடமும் காலக்ஷேபம் கேட்டவர். இவருடைய திருக்குமாரர் “எடுத்தகை அழகிய நாராயணர்” ஆவார். ஸ்வாமி பராசர பட்டரின் காலத்திற்குப்பின்பு ஸ்ரீரெங்க ராமானுஜ மடத்திற்கு பட்டத்திற்கும் நிர்வாகத்திற்கும் எவரும் இல்லாத போது, ஸ்வாமி கூரத்தாழ்வான் ஆண்டாள் அம்மங்கார் ஆணைக்கிணங்க சன்யாஸ ஆஸ்ரமம் பெற்று "கூர நாராயண ஜீயர்" என்று திரு நாமம் சாற்றப்பெற்று திகழ்ந்தார்.
மேலும் நலம் திகழ் நாராயணஜீயர், நாராயணமுநி, பெரியஜீயர், ஸ்ரீரங்க நாராயணஜீயர், ஸுத்த ஸம்ப்ரதாய நிஷ்டர் என்றும் வழங்கப்படுவது உண்டு. ஸ்வாமி, தீவிர ஸ்ரீ ஸுதர்சன உபாசகர். ஒருமுறை ஸ்வாமி கூரத்தாழ்வான், ”நாம் ஸ்ரீ வைஷ்ணவர்கள், எம்பெருமானாரே தஞ்சம் என்றிருத்தல் வேண்டும், நமக்கு இந்த உபாசனா மார்க்கம் தகாது!" என்று உரைக்க, ஸ்வாமியும், “அடியேனுக்காக இம்மியளவும் ப்ரார்த்திப்பதில்லை, எம்பெருமானுக்கும், எம்பெருமானருக்கும், பரம பாகவதர்களுக்கும் வேண்டியே ப்ரார்த்திப்பேன்”என்றாராம்.
ஒருமுறை, இப்போதிருக்கும் கொள்ளிடக்கரையில் நம்பெருமாள் தெப்போத்சவம் கண்டருளும்போது, திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நம்பெருமாளும் நாச்சியார்களும் எழுந்தருளி இருந்த தெப்பம் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டதாம். அப்போது ஸ்வாமி தனது உபாசனா சக்தியால் தெப்பத்தை நிறுத்தித் திருப்பி கரை சேர்த்தார். அதன்பின்பு தான் ஸ்ரீரங்க நகருக்குள்ளேயே பெரிய திருக்குளம் வெட்டி, தெப்போத்சவம் அதில் ஏற்பாடு செய்தார்களாம்.
மேலும் ஒருமுறை ஸ்வாமி திருவரங்கப்பெருமாள் அரையர் நோவு சாத்திப் பெரிய பெருமாள் கைங்கர்யம் தடைபட, ஸ்வாமி கூரத்தாழ்வான், நியமனத்தில் பேரில் ஸ்வாமி கூர நாராயண ஜீயர் ஸ்ரீ ஸுதர்சன சதகம் பாடி ஸ்வாமி திருவரங்கப்பெருமாள் அரையரின் நோவு தீர்ந்ததாம். ஸ்வாமி ஸ்ரீரங்கம் கோயிலில் பார்த்தசாரதி ஸந்நிதி, கருடாழ்வார் ஸந்நிதி ஏற்படுத்தி, பெரிய பெருமாளுக்கு அந்தரங்க கைங்கர்யங்கள் செய்து வாழ்ந்தவர்.
ஸ்வாமி இயற்றிய நூல்கள்: ஸ்ரீ ஸுதர்சன சதகம், ஸ்தோத்ர ரத்ன வ்யாக்யானம், ஸ்ரீ சூக்த பாஷ்யம், உபநிஷத் பாஷ்யம், நித்ய கிரந்தம்(திருவாராதனம்)
Comments
Post a Comment