கலியுக தர்மம்
(விஷ்ணு புராணத்தின் ஆறாவது அம்சமாக உள்ளது)
ஆத்யந்திகப் பிரளயம்
மைத்ரேயரே! அறிவுடையவன் ஆத்யாத்மிகம் முதலிய தாபங்கள் மூன்றையும் அறிந்து ஞானமும் வைராக்கியமும் உண்டாகப் பெற்று மோக்ஷம் என்ற ஆத்யந்திக லயத்தை அடைகிறான். ஆத்தியாத்மிக தாபமாவது தன் ஆன்மாவையும் தேகத்தையும் பற்றிய துக்கமாகும். அது சரீரத்தைப் பற்றியதும் மனதைப்
பற்றியதும் ஆகும். தலைவலி பீனசம், ஜ்வரம், சூலை, பகந்தரம், குன்மம், ரத்தபேதி, சோகை, சுவாசம், வாந்தி, கண் நோய், அதிசாரம், குஷ்டம், வாயுரோகம் இவை போன்ற ஏராளமான விஷயங்கள் சரீரத்தைப் பற்றியவை.
காமம், குரோதம், பயம், த்வேஷம், லோபம், மோகம், துக்கம், சோகம், அசூயா, அவமானம், பகைபாராட்டுதல், முதலிய மனது சம்பந்தப்பட்டவை பலவாகும். ஆதி பௌதிகமாவது ஜந்துக்களைப் பற்றியது. மிருக, பக்ஷி, மனுஷ்ய, பைசாச, ஸர்ப்ப, ராக்ஷஸஸாதிகளாலேயே உண்டாவதானால் அதுவும்
பலவகைப்பட்டடது. ஆதிதைவிகம் என்பது தெய்வத்தால் வருவது. அதுவும் குளிர், காற்று, வெய்யில், மழை, இடி முதலியவற்றால் உண்டாகும் பலவகையாகும். இந்தத் தாபங்கள் மூன்றும் கருவினாலும் பிறப்பினாலும் இறப்பினாலும் மூப்பினாலும் உண்டாக்கப்பட்டு அநேக ஆயிரம் வகைகளாகின்றன. விளக்குகிறேன்; கேளும்.
ஜந்துவானது மிகவும் மென்மையான உடலையுடையதாய், மலங்கள் நிறைந்த கர்ப்பத்திலே ஒருவகைத் தோலால் மூடப்பட்டு மிகவும் வளைந்த முதுகு, கழுத்துகளின் எலும்புகளையுடையதாக இருந்து கொண்டு, தாய் உண்ணும் புளிப்பு, கசப்பு, கரிப்பு, உப்பு முதலிய உறைகள் தன்மீது படும்போது அளவற்ற வேதனைகளையடைந்து தன்னுடம்பை நீட்டவும் மடக்கவும் வகையற்று, மலமூத்திரங்களாகிய சேற்றிலே கிடந்து, எங்கும் துன்பமே பெற்று, மூச்சு விடமாட்டாமல் அறிவு மாத்திரமேயுள்ளதாய் கடந்த காலத்தில் அநேகப் பிறவிகளையும் பிறப்பையும் நினைத்து, மகா விசனமடைந்ததாய், இப்படித் தன் கர்மத்தால் தானே கட்டுண்டு கிடக்கின்றது.
பிறகு, பிறக்கும்போது ப்ரம்மதேவனால் ஏவப்பட்ட காற்றினால் எலும்புகள் யாவும் நொறுங்கிப் போகும்படி பீடிக்கப்பட்டு மலமூத்திரங்களாலும் சுக்கில சுரோணிதங்களாலும் பூசப்பட்ட முகத்துடன், மிகவும் பலமான பிரசவ வாயுக்களால் தலைகீழாக திருப்பப்பட்டு வெகு ஸ்ரமத்தோடு தாய் வயிற்றிலிருந்து வெளியே வருகிறது. பிறந்த பிறகு, வெளிப்புறக் காற்று தன்மீது பட்டவுடன் பெருமூர்ச்சையுற்று முன்பு இருந்த ஞானத்தை இழக்கிறது. முட்களால் குத்தப்பட்டதைப் போன்றும் வாட்களால் வெட்டப்பட்டது போலவும் துர்க்கந்தமான இரணத்துக்கும் ஒப்பான யோனித் துவாரத்திலிருந்து புழுவைப் போலத் தரையில் விழுகின்றது. பின்னர்சொறிந்து கொள்வதற்கும் திரும்புவதற்கும் சக்தியற்றதாய், ஸ்நான பான ஆகாராதிகளைப் பிறரது இச்சைக்கேற்பவே பெறுகின்றது. மூத்திராதிகளாலே அசுத்தமான படுக்கையில் படுத்துக்கிடந்து எறும்பு, கொசு, ஈ முதலியவை கடித்தாலும் அவற்றைத் தடுக்க முடியாமல் தவிக்கின்றது. இவ்விதமாக பிறப்பின் துன்பங்களையும் பின்புண்டாகும் துக்கங்களையும் ஆதிபௌவுதிகம் துன்பங்களையும் மிகவும் இளமையிலேயே அடைகின்றது.
பிறகு வளர்ந்து பருவம் அடையும்போது மனிதன் இருள் மூடியதாலே, மூடனாகவே, "நான் யார்? நான் எங்கிருந்து வந்தேன்? இனி எங்கே போவேன்? எனக்கென்ன பயன்? நான் எந்தப் பந்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறேன்? எதற்கு நான் கட்டுப்பட்டவன்? காரணம் யாது? காரணமல்லாதது எது? செய்யத்தக்கது எது? தகாதது எது? சொல்லத்தக்கது எது? சொல்லத் தகாதது எது? தர்மம் எது? எது அதர்மம்? எங்கே இருக்கிறேன்? எப்படி இருக்கிறேன்? இனி செய்ய வேண்டுவது எது? எது குற்றம்? எது குணமுடையது? " என்று ஒன்றையும் அறியமாட்டாதவனாக இருக்கிறான். இவ்வாறு மிருகங்களைப் போல, உண்பதையும், புணர்வதையுமே கொண்டு, அஞ்ஞானத்தால் உண்டான அநேக துன்பங்களையும் அனுபவிக்கிறான். அஞ்ஞானம் என்பது தமோகுணத்தின் விகாரம். அதனாலேயே மனிதன் தீயகாரியங்களைச் செய்ய வேண்டி வருகிறது.
ஆகவே, வைதீகக் கர்மங்கள் நடப்பதில்லை. அஞ்ஞானிகளுக்கு இம்மையிலும் மறுமையிலும் துன்பம் அதிகமாகிறது. பிறகு யவ்வனத்தைத் தாண்டி முதுமை வரும்போது உடல் மெலிந்து, கட்டுத் தளர்ந்து, பற்கள் ஆடி, உதிர்ந்து, நரையும் அதிகமாகி, சற்று தூரத்தில் இருப்பதும் தெரியாதவாறு கண்ணின் கருவிழிகள் உள்ளே ஆழ்ந்து, மூக்குத் துவாரத்திலிருந்து மயிர்கள் உதிர, உடல் ஒடுங்கி, எலும்புகள் எல்லாம் வெளிப்பட்டுத் தெரிய, முதுகெலும்பு வளைய தீபனம் மந்தமாவதால் உணவு நன்றாகச் செல்லாமலும் செரிக்காமலும், செயல்கள் குறுக, நடப்பதும் எழுவதும் படுப்பதும்கூட வருத்தமாக இருக்க, காது கேளாமலும், கண்கள் தெரியாமலும் இருக்க, வாயினின்று சாளை வாய்நீர் வடிந்து கொண்டிருக்க மனிதன் தவிக்கிறான்.
இவ்விதமாகச் சகல இந்திரியங்களும் அஸ்வாதீனப்பட்டு, மரணங்கிட்டும்போது, முன்பு தான் அனுபவித்தவற்றை நினைத்து உருகிக்கொண்டு ஒரு வார்த்தை சொல்லக்கூட மிகவும் வருத்தங் கொண்டவனாய், சுவாசகாசம் உண்டாவதால் மிகுந்த ஆயாசமும் தூக்கமின்மையும் உடையவனாய், எழுந்திருக்கவும் நடக்கவும் உட்காரவும் பிறருடைய உதவி அவசியப்படுவதாலேயே, வேலைக்காரர்கள், மனைவியர், பிள்ளைகள் யாவரும் அவமதிக்க, ஒரு சக்தியுமின்றி உண்ணவும் ஆசையுள்ளவனாய்; ஊழியரும் பரிகசிக்க பந்துக்களும் வெறுப்படைய,தன்னுடைய வாலிப அநுபவத்தைப் பூர்வ ஜன்மத்தின் அனுபவம்போல் நினைத்து, மனம் வெதும்பி பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறான், இதுபோல் மூப்பில் அவன் பற்பல துக்கங்களை அனுபவித்து மரணத்தை அடைகிறான்.
இனி, அந்த மரணத்தின்போது நேரும் துன்பங்களையும் கேளும். கால், கைகள், கழுத்து இவை கட்டுவிடப் பெற்று பெரு நடுக்கமுள்ளவனாய் சிறிது நேரம் அறிவும், சிறிது நேரம் அறிவழிவுமுள்ளவனாய், மக்கள், மனை, வீடு, மாடு, தனம், தானியம் ஆகிய இவையெல்லாம் இனி எப்படிப் போமோ என்று கலங்கியவனாய் இப்படிப்பட்ட நிலையில் இருக்க ரம்பங்கள் போன்ற மிகக் கொடிய யமனின் அம்புகளான கொடிய பெரும் வியாதிகளால் உயிர் பெயர, கண்கள் சுழல கைகால்களை உதறிக் கொண்டு நாக்கும் உதடும் உலர உதானவாயு எழும்பித் துன்புறுத்த கண்டம் அடைத்துக் குருகுருவென்ற சப்தம் செய்ய, பெருந்தாபமும் பெரும் பசியும் பெருந்தாகமும் பொருந்திய நிலையில், யமகிங்கரர்களால் வெகு பிரயாசைப்பட்டுத் தன் தேகத்தை விட்டுக் கிளம்புகிறான்.
உடனே யாதனா தேகத்தை அடைகிறான்! இவையும் இவை மேலும் பலவிதத் துன்பங்களும் மரணத்தில் உண்டாகின்றன. இறந்த பின்னர், மனிதர்கள் நரகத்தில் அவஸ்தைகளையும் சொல்கிறேன் கேளுங்கள். முதலில் பாசத்தாற் கட்டிப் பிணைப்பதும், பிறகு தடியால் அடிப்பதும் உக்கிரமான யமனைக் காண்பதும், கொடிய வழியைக் காண்பதும் ஆகிய துன்பங்களை அனுபவித்து, பிறகு காய்ந்த மணலிலும் யந்திரம் கத்தி முதலியவற்றால் நரகத்திலே படும்பாடுகள் கொடியவையாகும்.
ப்ராம்மணோத்தமரே; கேளும்! மரணமடைந்த பிறகு யமகிங்கரர்களால் பல்வாளினால் அறுக்கப்பட்டும் மூசையிற் போட்டுக் காய்ச்சப்பட்டும், கோடரிகளால் பிளக்கப்பட்டும், பூமியில் புதைக்கப்பட்டும், சூலங்களில் ஏற்றப்பட்டும், புலி வாயில் இடப்பட்டும், கழுகுகளால் குத்திப் பிய்க்கப்பட்டும், மிருகங்களால் கடிக்கப் பட்டும், காயும் எண்ணெய்க் கொப்பரையில் போடப்பட்டும், பொரிக்கப்பட்டும், உப்புச் சேற்றிலே புரட்டப்பட்டும், உயரத்திலிருந்து குப்புறத் தள்ளப்பட்டும், யந்திரங்களில் ஏற்றி தூரமாக வீசி எறியப்பட்டும், பாபத்தின் பயன்களாய் மனிதர்கள் நரகத்தில் பெறுகின்ற துன்பங்களை இவ்வளவுதான் என்று சொல்லிவிட முடியாது.
இத்தகைய துக்கங்கள் நரகத்தில் மட்டுமல்ல; சுவர்க்கத்திலும் உண்டு. சொர்க்கத்தில் சுகானுபவத்தை அனுபவிக்கும் போதே புண்ணியம் அழிந்து, இனி நாம் வீழப்போகிறோம் என்ற நினைப்பினால் பயம் உண்டாகும்போது மனதிலே பெருந்துக்கம் உண்டாகும். இவ்விதமாக நரகத் துன்பங்களை அனுபவித்து மீண்டும் கர்ப்பத்தில் பிரவேசித்து மனிதன் மீண்டும் பிறக்கிறான். இவ்வாறு பலமுறைகள் பிறப்பதும் இறப்பதுமாய் அலைகிறான்.
மேலும் பிறந்தவுடனே, பால்யத்திலோ, வாலிபத்திலோ, நடுவயதிலோ, முதுமையிலோ எப்போதோ நிச்சயமாக இறக்கிறான். பிழைத்திருக்கும்போதே பலவிதமான துக்கங்களால் சூழப்படுகிறான். பஞ்சு மொய்த்திருக்கும் பருத்திக் கொட்டையைப் போல்! மேலும் பொருளைச் சம்பாதிப்பதிலும் அதைக் காப்பாற்றுவதிலும் அதன் அழிவிலும் இஷ்டமானவருக்குத் துன்பம் நேரும்போதும் அவனுக்குப் பற்பல துன்பங்களே உண்டாகின்றன.
மைத்ரேயரே! எந்தெந்தப் பொருள் மனிதருக்கு இன்பமாக இருக்கிறதோ, அதுவே துன்பம் என்னும் மரத்திற்கு விதையாகின்றது. மனைவி, மக்கள், நண்பர், பொருள், வீடு, நிலம் முதலியவற்றால் எத்தனை துக்கம் உண்டாகிறதோ, அந்த அளவுக்கு அவற்றால் அடையும் சுகம் இருப்பதற்கில்லை. இவ்விதமாகச் சம்சாரத்தின் துக்கமாகிய வெய்யிலால் தகிக்கப்பட்டு அலையும் மனிதனுக்கு மோக்ஷம் என்ற மரத்தின் நிழலைத் தவிர, வேறு எங்கே சுகம் கிடைக்க முடியும்?
ஆகவே, கர்ப்பம், பிறவி வார்த்திக்யம் முதலானவற்றால் மனிதருக்கு உண்டாகும் தாபங்கள் ஆகிய மூன்றுக்கும் மருந்து யாது என்றால், மற்றொரு சுகத்திலும் அதிசயந்தோன்றாது இருப்பதான மகா சுகரூபமாயும் துக்கத்தின் சம்பந்தமே இல்லாததாயும் நித்தியமாயும் உள்ள பகவத் பிராப்தியே என்பது எனது கருத்து. ஆகையால் அறிவுடைய மனிதர் ஈன குணங்கள் ஒன்றும் இல்லாமல் சற்குணங்கள் நிறைந்தவனாகப் பகவானை அடைய முயற்சி செய்யவேண்டும்.
முனிவரே! எந்த எம்பெருமானை அடைவதற்கு ஞானமும் கர்மமும் உபாயங்கள் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றனவோ, அந்த ஞானம், ஆகமஜம் என்றும் விவேகஜம் என்றும் இருவகையாகும். சாஸ்திரங்களால் உண்டாவது ஆகமஜம், யோக சிந்தனையில் உண்டாவது விவேகஜம். முந்தியதற்குச் சப்தப் பிரமம் என்றும் பிந்தியதற்குப் பரப்பிரமம் என்றும் பெயர்.
இந்த இரண்டு ஞானங்களுக்கும் உள்ள பேதமாவது - அஞ்ஞானம் என்ற அந்தகாரமானது பொருள்களை மறைப்பது போல், ஜீவாத்மா, பரமாத்மா, ஸ்வரூபங்களை மறைப்பதால் அது அந்தகாரம் போன்றேயுள்ளது. ஆகமஜஞானம், விளக்கானது இருளை நீக்கிப் பொருளை விளங்கச் செய்வதுபோல் தேக, ஆன்மாதி மயக்கங்களை நீக்கி ஜீவபரஸ்வரூபங்களை ஒருவாறு விளக்குவதால் இது விளக்குப்
போன்றதாகும். பரப்பிரம்மம் என்ற விவேகஜஞானம், சூரியனானது இருள் முழுமையும் அழித்து பொருள்கள் யாவற்றையும் தெளிவாக விளக்குவதைப் போல், அஞ்ஞானத்தையும் முழுமையாகப் போக்கி,
ஸ்வரூபங்களை பிரத்யக்ஷமாய் விளங்கச் செய்வதால், அது சூரியனைப் போன்றதாகும்.
இவ்விஷயத்தில் மநுவும் வேதாந்தத்தை அறிந்து சொல்லியிருப்பதைக் கேட்பீராக. சப்தப் பிரமம் என்றும் பரப்பிரமம் என்றும் இரண்டு பிரமங்கள் உண்டு என்று அறியவேண்டும். மனிதன், சப்தப் பிரமத்தில் தேறினால் பரப்பிரமத்தை அடையலாம். அதர்வண வேதம் இப்படியே சொல்கிறது. அக்ஷரம் என்று சொல்லப்படும் பிரமத்தை எந்த வித்தையால் அடையலாமோ, அதற்குப் பரவித்தை என்று பெயர். கர்மங்களை அறிவிக்கும் வேதாதிகள் அபரவித்தை எனப்படும்.
அந்தப் பரவித்தையின் விஷயமான பிரமஸ்வரூபமானது வேதாந்தத்தாலன்றித் தோன்றாததும், தோன்றல், மறைதல், கெடுதல், வளர்தல், குறைதல் திரிதல்களாகிய விகாரமின்றியும், வாக்குக்கும் மனதுக்கும் எட்டாமலும் தேவ மனுஷ்யாதி ரூபங்கள் இல்லாமலும், கைகால் முதலிய உறுப்புகள் இல்லாமலும் யாவற்றையும் நியமிப்பதாகவும் எங்குமுள்ளதாகவும் பூதங்களுக்குக் காரணமாகவும் எல்லாவற்றையும் வியாபித்து ஒன்றினாலும் வியாபிக்கப்படாமலும் இருக்கிறது. ஞானிகள் எதைக் காண்கிறார்களோ, அதுவே பிரமம்! அதுதான் மேலான ஞானஜோதி! அதையே விஷ்ணுவின் உத்தம ஸ்வரூபம் என்று ஸ்ருதிகளிற் சொல்லப்பட்டுள்ளது.
சூக்ஷுமமான அந்தப் பிரமத்தையே மோக்ஷம் பெறவேண்டுவோர் தியானிக்க வேண்டும். பகவான் என்ற சொல், எம்பெருமானின் அளவற்ற ஸ்வரூப, ரூப, குண விபவங்களைக் குறையறச் சொல்லத் தக்கது. பரமாத்மாவின் தத்துவம் எதனாலே விளங்குமோ அத்தகைய துவாதச அக்ஷரத்தை அங்கமாகக் கொண்டதே பரவித்தையாகும். மற்ற வேதபாகம் யாவும் அபரவித்தையாம். சகலாதாரமாயும் சகலாதேயமாயும் விளங்குகிற ஸ்ரீவிஷ்ணுவையே வாசுதேவபதம் போதிக்கிறது.
முன்பு கேசித்வஜன் என்பவரைக் காண்டிக்கிய ஜனகர் வினவ, அநந்தனான ஸ்ரீவாசுதேவனுடைய திருநாமத்தை நாம் சொன்னது போலவே, அவரும் சொல்லியிருக்கிறார். அதை உமக்குச் சொல்கிறேன். ஸ்ரீவாசுதேவ பகவான், இயல்பினால் குற்றங்களோடு கலவாத சகல கல்யாண குண பரிபூரணன்! சகல பூதங்களையும் தனது சக்தியின் ஒரு சிறிய பங்கினால் சூழ்ந்திருப்பவன்! தனது திருவுளப்படி, அந்தந்த தருணத்திற்கு வேண்டிய திவ்ய மங்கள விக்கிரகத்தை ரூபத்தை எடுப்பவன்.
அதனால் சகல உலகங்களுக்கும் நலன்களைச் சாதிப்பவன். அளவற்ற தேஜஸ் பலம், ஐசுவரியம், ஞானம், வீரியம், சக்தி முதலிய குணங்களின் ராசி போன்றவன். உயர்ந்தோரிலும் உயர்ந்தவன் ஒரு துர்க்குணமும் இல்லாதவன். உயர்ந்தவர்களுக்கும் தாழ்ந்தவர்களுக்கும் ஈஸ்வரன். இத்தகைய எம்பெருமான் வியூக விபவாதி ரூபங்களினாலே வியஷ்டி ரூபனாகவும் சமஷ்டி ரூபனாகவும் இந்த ரூபங்களால் விளங்குவதால் வ்யக்தனாகவும் யாவற்றையும் எல்லாக் காலங்களிலும் எல்லா வகையிலும் ஆள்பவனாகவும், எல்லாவற்றையும் எப்போதும் தான் ஒருங்கே பிரத்யக்ஷமாய்க் காண்பவனாகவும் யாவும் பொருந்தியவனாகவும், சகல சக்திகளும் உள்ளவனாகையால் பரமேஸ்வரன் என்ற திருநாமத்தையுடையவன் ஆகிறான்.
இவ்விதமாகச் சகல தோஷரகிதமாய், சுத்தமாய், உத்தமமாய், என்றுமே பிரகிருதிக்கு உட்படாததாய் என்றும் ஒருபடிபட்டதாயுள்ள பகவத் ஸ்வரூபமானது எதனால் அறியப்படுகிறதோ, அந்த ஆகம ஞானமும் எதனாலே காணப்படுகிறதோ அந்த விவேக ஞானமும் எதனால் அடையப்படுகிறதோ அந்தப் பக்தி ரூபமான ஞானமுமே உண்மையான ஞானம் என்று சொல்லப்படும். இதற்குப் புறம்பானதெல்லாம் அஞ்ஞானமேயாகும்.
Comments
Post a Comment