அர்ச்சிராதி மார்க்கம்
(மோட்சம் அடையும் ஆத்மாக்கள் மட்டுமே இந்த வழியை அணுக முடியும். மீதமுள்ளவர்களுக்கு அல்ல)
"முதலில் ஜீவாத்மா பிரிதல்":
முதுகுத்தண்டை மத்தாக வைத்துக் கொண்டு உடல் முழுவதையும் கடைந்து, புலன்கள் மற்றும் பூத சூஷ்ஷுமங்கள் அனைத்தையும் ப்ராணவாயு மற்றும் மனதுடன் சேர்த்து கொட்டி ஆத்மாவை சரீரத்தில் இருந்து பிரித்து விடுகிறார் வைகுண்டநாதனான ஸ்ரீமன் நாராயணன்.
"இரண்டாவதாக ஜீவாத்மா வெளியேறுதல்":
இதயத்தில் இருந்து தலைக்கு 101 மிக நுண்ணிய நரம்புகள் (நாடிகள்) பிரயாணம் செய்கின்றன. அதில் 101வது நாடி சூஷூம்னா நாடி ஆகும். நம் ஆத்மா இந்த சூஷூம்னா நாடியை பற்றினால் தான் வைகுண்டம் செல்லும் அர்ச்சிராதி மார்கத்தில் ப்ரயாணிக்க முடியும். பூரண இருட்டிலே வைகுண்டநாதனே தன் திருமேனி ஒளியாலே ஆத்மாவுக்கு 101வது நாடியை பிடித்து கொடுக்க ஆத்மாவும் அதைப்பற்றி பிரம்மரந்திரம் என்னும்படியான உச்சம் தலையின் ஒரு சிறு துளை வழியாக வெளியேறுகிறது.
மூன்றாவதாக "வைகுண்ட மார்க்கம்":
ஆத்மா சரீரத்தில் இருந்து வெளியேறி பன்னிரண்டு (12) லோகங்கள் பிரயாணிக்க மிக நுண்ணிய உடலை வைகுண்டநாதன் கொடுக்க ஆத்மாவானது கீழ்க்கண்ட லோகங்களில் பிரயாணித்து மூல ப்ரக்ருதியை கடந்து விரஜா நதியை அடைகிறது:
- அர்ச்சிஸ் (ஒளி)
- பகற்பொழுது
- சுக்லபக்ஷம்
- உத்தராயணம்
- சம்வத்ஸரம்
- வாயுலோகம்
- சூரியமண்டலம்
- சந்திரமண்டலம்
- வித்யுத்லோகம் (மின்னல்)
- வருணலோகம்
- இந்திரப்பட்டணம்
- சத்யலோகம் (பிரம்மா)
அமானவன் என்கிற மின்னல், வித்யுத் லோகத்திலிருந்து ஆத்மா கூடவே வந்து, பின்பு ஊழிப் பிரளயம் போன்ற தேஜஸ் நிறைந்த உலகத்தில் நுழைந்து அங்கு காணப்படும் விரஜா நதியில் இந்த ஆத்மாவானது நீராடியதும், தற்போதுள்ள நுண்ணிய சரீரமும் களையப்படும்.
"நான்காவதான அத்தியாத்சர்யமான வைகுண்டம் சேர்தல்"
நுண்ணிய சரீரமும் களையப்பட்டு சூக்ஷமமாக ஜோதிஸ்வ்ரூபமாக உள்ள ஆத்மாவை அமானவன் (மாசற்றவன்), விரஜயின் அக்கரையில் சேர்க்க, ஆத்மாவுக்கு அப்ராக்ருத சரீரம் (பிருத்வி, அப்பு, தேஜஸ், வாயு, ஆகாசம் ஆகிய பஞ்ச பூதங்கள் இல்லா உடல்) கிடைக்கப்பெற்று அதீத ஞானம் பல்கும்.
ஞானம் - சாலோக்கியம், சாமிப்யம், சாருப்யம் மற்றும் சாயுஜ்யம்.
சாலோக்யம் - பரமாத்மாவிடம் வருவது.
சாமீப்யம் - அருகாமையில் செல்வது
சாருப்யம் - அவனுருவாகி ஒளிர்விடும் நிலை
சாயுஜ்யம் - இரண்டறக்கலத்தல் / அவனைப்போலவே இருத்தல்
"ஐந்தாவதாக ஸ்ரீ வைகுண்டம்":
ஆத்மாவுக்காக வைகுண்ட வாசல் திறந்து, "வந்தவர் எதிர் கொள்ள மாமணி மண்டபத்து அந்தமில் பேரின்பத்து அடியரோடிருந்தமை" என்கிறபடி அப்சரஸ்கள் வரவேற்க ஆத்மா உள்ளே நுழைந்து, திருமாமணி மண்டபத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ வைகுண்டநாதனை கண்களால் ஆரப்பருகி, அவன் கண்களில் பெருகிவரும் கருணைப்பிரவாகத்தை தாங்கவொண்ணாமல் "திருமணத்தூணே பற்றிநின்னு" என்னும்படியாக திருமணத்தூண்களைப்பற்றி இங்கு மலையே திருவுடம்பாக இருக்கிற பெருமாள் "சேஷாத்திரி" என்னும் மலைக்கு ஒப்பான ஆதிசேஷனின் கால் கொண்டு மேலேறி ஸ்ரீவைகுண்டநாதனை அணுக ஸ்ரீவைகுண்ட நாதனும் ஆத்மாவை அழைத்து, மடியில் அமர்த்தி, ஆரதழுவி, உச்சிமுகர்ந்து, குளிர்ந்து கடாக்ஷித்து பின்பு வைகுண்டத்தில் லயிக்கவிட ஆத்மாவும் பகவான் ஸ்ரீமன் நாராயணனைப்போலவே சதுர்புஜ சங்கு சக்ரதாரியாய் நித்யஸூரிகளோடே நித்யவாஸம் செய்து வருகை.
Comments
Post a Comment